|
![]() |
|
|
சிறு கதைகள் தமிழாக்கம் 3 Dec 2022 பந்தயம் மூலம்: அன்ட்டன் ப்பவ்லோவிச் செக்கோவ் Dec 2022 லொட்டரி சீட்டு மூலம்: அன்ட்டன் ப்பவ்லோவிச் செக்கோவ் Dec 2022 துன்பம்! யாருக்கு நான் என் சோகத்தை சொல்வேன் மூலம்: அன்ட்டன் ப்பவ்லோவிச் செக்கோவ் பயண நினைவுகள் 2 Dec 2022 அப்பாவுடன் யாழ்ப்பாணத்தை நோக்கி, என் முதல் நீண்ட தூர ரயில் பயணம் Jul 2022 காத்திரு மீண்டும் வருவேன் வாழ்க்கை நினைவுகள் 4 Sep 2023 தயவு செய்து என்னை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும் Jan 2022 என்னுள், என்னைப்போல் ஒருவன் Jan 2022 எழுதுவதும் தீதே Aug 2020 பாடல் வரிகள் |
கதாசிரியர் : அன்ட்டன் ப்பவ்லோவிச் செக்கோவ் (1860 - 1904, 44 வயது) ரஷிய மொழியில் முதல் பதிவு : Jan 1889 ஆங்கிலத்தில் மொழிமாற்றம் : 1915, The Bet தமிழாக்கம்: 2022, ஷான் உதே "இரண்டும் சமமாக நெறியற்றவை", வந்திருந்த விருந்தினர் ஒருவர் மற்றையவர்களின் பேச்சுக்களை எல்லாம் கவனித்துவிட்டு சொன்னார். "அவை இரண்டுக்கும் ஒரே விளக்கம் தான். ஏனென்றால் அவை ஒன்றை தான் செய்கின்றன, உயிரைப் பறிப்பது. அரசு கடவுள் அல்ல. எந்த அரசுக்கும் விரும்பிய தருணங்களில் உயிர்களை மீட்க முடியாது இருப்பதனால், அது உயிர்களை எடுத்துகொள்ளவும் அதற்கு உரிமை இல்லை". வந்த விருந்தினர்களில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளம் வழக்கறிஞர், தன்னிடம் கருத்து கேட்டபோது, "மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் சமமாக நெறியற்றவை. ஆனால் மரண தண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்கும் இடையே நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நான் நிச்சயமாக இரண்டாவதை தான் தேர்வு செய்வேன். எப்படியாவது வாழ்வது என்பது, இல்லாததை விட சிறந்தது", என்று சொன்னார். பரபரப்பான விவாதம் எழுந்தது. தனது இளம் வயதில் பதட்டமானவராக வாழ்ந்த அந்த வயதான வங்கியாளர் திடீரென்று பெரும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார். அவர் மேசையை முஷ்டியால் அடித்து அந்த இளைஞனை நோக்கி கத்தினார். "அது உண்மை இல்லை! உங்களால் ஐந்து வருடங்களுக்கு மேல் தனிமைச் சிறை ஒன்றில் இருக்க முடியாது என்று இரண்டு மில்லியன் ரூபிள்ஸ் பந்தயம் கட்டுகிறேன்". அந்த இளைஞனும் "நீங்கள் அதை உண்மையாகத்தான் சொல்கிறீர்களா என்றால், நான் பந்தயம் எடுப்பேன், ஆனால் நான் ஐந்து அல்ல, பதினைந்து ஆண்டுகள் இருக்கத்தயார்". "பதினைந்து? முடிந்தது!" என்று வங்கியாளர் பெரும் கூச்சலிட்டார். "நண்பர்களே, நான் இரண்டு மில்லியன் பந்தயம் கட்டுகிறேன்!" "ஒப்புக்கொள்கிறேன்! நீங்கள் உங்களது மில்லியன்களை பணயம் வைக்கின்றீர்கள், நான் என் சுதந்திரத்தை பணயம் வைக்கிறேன்!", என்றார் இளைஞன். இந்த காட்டுமிராண்டித்தனமானதும் அர்த்தமற்றதுமான பந்தயம் தொடங்கப்பட்டது! வங்கியாளர், வழிதவறியவராகவும் அற்பமானவராகவும் மாறி, தனது சேமிப்பிற்கு அப்பாற்பட்ட மில்லியன்களுடன், பந்தயத்தில் சேர்வதில் மகிழ்ச்சியடைந்தார். இரவு உணவின் போது அவர் அந்த இளைஞனை பற்றி கேலியாக மற்றயவர்களிடம் சொல்ல ஆரம்பித்தார். "இளைஞனே, நன்றாக யோசியுங்கள், நேரம் இன்னும் உங்களிடம் தான் இருக்கிறது. இரண்டு மில்லியங்கள், எனக்கு அவை அற்பமானவை. ஆனால், நீங்களோ உங்களுடைய வாழ்க்கையில் மூன்று அல்லது நான்கு நல்ல வருடங்களை இழக்கப்போகின்றீர்கள். நான், மூன்று அல்லது நான்கு என்றேன். காரணம், நீங்கள் அதற்கு மேல் தாக்கு பிடிக்கமாட்டீர்கள். இதையும் மறந்து விடாதீர், சந்தோஷமேயில்லாத மனிதரே! தன்னார்வ சிறைவாசம் என்பது, கட்டாய சிறைவாசத்தை விட தாங்கமுடியாத ஒரு கடினமான பெரிய ஒப்பந்தம். எப்பொழுதாவது சுதந்திரமாக வெளியேறிவிடலாம் என்பது உங்கள் உரிமை என்ற நினைவுகள், உங்களை, நீங்கள் சிறையில் இருக்கும் காலம் முழுவதையும் வீணடித்துவிடும். நான் உங்களுக்காக வருந்துகிறேன்". இப்போது வங்கியாளர், அங்கும் இங்கும் நடந்தபடி, நடந்த எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொண்டு, தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். "அந்த பந்தயத்தின் பொருள் என்ன? அந்த இளைஞன் தன் வாழ்நாளில் பதினைந்து வருடங்களை இழப்பதாலும், இரண்டு மில்லியனை நான் தூக்கி எறிவதாலும், யாருக்கு என்ன பயன்? ஆயுள் தண்டனையை விட மரண தண்டனை சிறந்தது அல்லது மோசமானது என்பதை என்னால் நிரூபிக்க முடியுமா? இல்லை, இல்லை". இது அனைத்தும் முட்டாள்தனமானதாகவும் அர்த்தமற்றதாகவும் அவருக்கு இருந்தது. "என்னை பொறுத்தவரை அந்த இளைஞன் ஒரு சபல புத்தியுள்ள ஒரு செல்லமான பிராணி. அந்த இளைஞனை பொறுத்தவரை இது பணத்திற்கான எளிய பேராசை". பின்பு அவருக்கு அன்று மாலை என்ன நடந்தது என்று நினைவில் வந்தது. அந்த இளைஞன், பதினைந்து வருடம் கடும் மேற்பார்வையில், வங்கியாளரின் பின்புறத்தோட்டத்தில் அமைந்த தங்கும் விடுதியில், தனது சிறைவாழ்க்கையை வாழவேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. மேலும், அந்த இளைஞனுக்கு, இந்த பதினைந்து வருடங்களில், இந்த தங்கும் விடுதியின் வாசலை தாண்டுவதற்கு சுதந்திரம் இல்லை என்றும், யாரையும் சந்திக்க முடியாது என்றும், மனிதர்களின் குரலை கூட கேட்க கூடாதென்றும், பத்திரிகைகளோ கடிதங்களோ அனுப்ப அனுமதி கொடுக்கப்படமாட்டாது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆயினும், அந்த இளைஞனுக்கு, இசைக்கருவிகள் மீட்பதற்கும், புத்தகங்கள் வாசிப்பதற்கும், திராட்சை மது குடிக்கலாம் என்றும், புகைக்கலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, அவர் வெளியுலகுடனான உறவை, இதற்காகவே அமைக்கப்பட்ட சிறியதொரு ஜன்னல் மூலமாகத்தான் மாத்திரமே வைத்துக்கொள்ள முடியும். அவருக்கு தேவையான எதையும் எந்த அளவிழும் கேட்டுப்பெறலாம். அதை அவர் எழுத்தின் மூலமாகத்தான் கேட்கவேண்டும். கேட்டவைகள் அந்த ஜன்னலின் வழியாக மட்டுமே அவர் பெற முடியும். அந்த ஒப்பந்தத்தில் ஒவ்வொரு சிறியவிடயமும் பல அற்பவிடயங்களும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவரது சிறைவாசம், கடுமையான தனிமைச்சிறைவாசமா அமையவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தோடு, நவம்பர் 14ம் திகதி 1870ம் ஆண்டு பகல் 12 மணியிலிருந்து, நவம்பர் 14ம் திகதி 1885ம் ஆண்டு பகல் 12 மணி வரை, அவர் சரியாக பதினைந்து வருடங்கள் அங்கு கட்டாயம் தங்கியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தை கொஞ்சமேனும் அந்த இளைஞன் உடைக்க முயற்சி செய்தால், முடியும் நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்கள் முன்பாகயிருப்பினும், வங்கியாளர் அவருக்கு இரண்டு மில்லியன்கள் கொடுக்கவேண்டிய கட்டாயத்திலிருந்து வெளிவரலாம். ◆ அவரது முதல் வருட சிறைவாசத்தில், அவர் அனுப்பிய சிறு குறிப்புகளிலிருந்து, அவர் தனிமையினாலும் மனச்சோர்வினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பியானோவிலிருந்து வந்த ஒலி இரவு பகலாக தொடர்ந்து அந்த விடுதி முழுதும் கேட்டவண்ணமே இருந்தது. அவர் திராட்சை மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் மறுக்க ஆரம்பித்தார். திராட்சை மது, ஆசைகளைத் தூண்டுகிறது. அந்த ஆசைகள் ஒரு சிறைவாசியின் மோசமான எதிரிகள் என்று அவர் அனுப்பிய குறிப்பொன்று சொன்னது. அத்தோடு, நல்லதொரு திராட்சை மது அருந்திவிட்டு யாரையுமே பார்க்க முடியாதிருப்பது என்பதை விட சலிப்பான விடயம் வேறெதுவுமில்லை. புகையிலை, அறையை நாற்றமடிக்க வைத்துவிடும். இந்த முதல் வருடம் அவர் கேட்டனுப்பிய புத்தகங்கள் எல்லாமே முக்கியமாக இலகுவான கதாபாத்திரங்களை கொண்ட புத்தகங்களாக இருந்தன. நாவல்கள் பல சிக்கலான காதல் கதைக்களத்தை கொண்டவைகளாகவும், பரபரப்பானவைகளாகவும் இருந்தன. இரண்டாவது வருடம், பியானோ மௌனமாகிவிட்டிருந்தது. அவர் கேட்டனுப்பிய பாடல்கள் எல்லாம் தரமான பழைய பாடல்களாக இருந்தன. ஐந்தாம் வருடம், இசை பெரிய சப்ப்தமாக கேட்டது. அத்தோடு, அவர் திராட்சை மதுவும் கேட்டனுப்பியிருந்தார். அவரை, ஜன்னலினூடு பார்த்தவர்கள், அந்த வருடம் முழுவதும் அவர் குடிப்பதையும், உண்பதையும், படுத்திருப்பதையும் தவிர வேறேதும் செய்யவில்லை என்றார்கள். சில வேளைகளில் தன்னுடன் கோபமாக கதைப்பதுவும் கொட்டாவி விடுவதுமாகவும் இருந்தார். அவர் புத்தகங்கள் வாசிக்கவில்லை. சில இரவு நேரங்களில் அவர் புத்தகங்களை வாசித்தார். அவர் மணிக்கணக்காக எழுதுவதும் உண்டு. ஆனால் காலையில் எழுதியவைகள் யாவையையும் கிழித்து குப்பையில் போட்டு விடுவார். பல தடவைகள் அவர் அழுவது கூட கேட்டது. ஆறாம் ஆண்டின் பிற்பகுதியில், அவர் வெறித்தனமாக புதிய மொழிகளையும் வரலாறுகளையும் தத்துவங்களையும் வாசிக்க ஆரம்பித்தார்.அவர் ஆவலுடன் வாசிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் கேட்ட புத்தகங்களைப் பெறுவதற்கு வங்கியாளர் அளவுக்கு அதிகமாகவே வேலை செய்ய வேண்டியிருந்தது. நான்கு வருட காலங்களில் அறுநூறுக்கு மேட்பட்ட தொகுதிகள் அவருடைய கோரிக்கைகளுக்காக சேகரிக்கப்பட்டன. இந்த காலங்களில் தான், வங்கியாளருக்கு இந்த கடிதம் அவரது சிறைவாசியிடமிருந்து கிடைத்தது. "என் அன்புக்குரிய சிறைக்காவலரே! நான் இந்த அக்கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதுகிறேன். இதை இந்த மொழிகள் தெரிந்தவர்களிடம் கொடுத்து வாசிக்கச்சொல்லுங்கள். அவர்கள் இதில் எந்தவித பிழைகளையும் கண்டுபிடிக்க முடியாவிட்டால் வானத்தை நோக்கி ஒரு முறை சுடும்படி உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் சுடுவதன் மூலம், எனது எழுத்துக்கள் சரிதான் என்பதை தெரிந்து கொள்வேன். எல்லா மேதைகளும் பல்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரிடமும் ஒரே சுடர் தான் எரிகிறது. அவற்றைப் புரிந்து கொள்வதிலிருந்து என் ஆன்மா இப்போது எவ்வளவு அசாத்தியமான மகிழ்ச்சியை உணர்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்". அந்த சிறைவாசியின் ஆசைகள் நிறைவேற்றப்பட்டன. வங்கியாளர் தோட்டத்தில் இரண்டு முறை சுட உத்தரவிட்டார். பத்து வருடங்களின் பின், சிறைவாசி மேசையில் அசையாமல் இருந்தபடி, இயேசுவின் போதனைகளைத்தவிர (Gospel) வேறெதையும் வாசிக்கவில்லை. நான்கு வருடங்களில் அறுநூறு தொகுதிகளை கற்று தேர்ச்சி பெற்ற ஒருவர், மிகவும் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மெல்லிய புத்தகத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடத்தை வீணாக்குவது வங்கியாளருக்கு விசித்திரமாகத் தோன்றியது. மதங்களின் வரலாறும் இறையியலும் இயேசுவின் போதனைகளைத்தொடர்ந்து அவர் வாசித்த புத்தகங்கள். சிறைவாசத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில், கைதி ஏராளமான புத்தகங்களை பாகுபாடின்றி வாசித்தார். ஒரு தடவை அவர் இயற்கை அறிவியல் வாசிப்பதில் பரபரப்பாக இருந்தார். பின் பைரன் அல்லது ஷேக்ஸ்பியர் அவர்களின் நூல்களை கேட்ட்டெடுத்துக்கொண்டார். சில காலங்களில், வேதியியல் பற்றிய புத்தகங்கள், மருத்துவம் பற்றிய ஒரு கையேடு, ஒரு நாவல் மற்றும் தத்துவம் அல்லது இறையியல் பற்றிய சில ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை ஒரே தடவையில் அவர் கோரிய குறிப்புகள் இருந்தன. அவரது வாசிப்புக்கள், ஒரு மனிதன் தனது கப்பலின் இடிபாடுகளுக்கு இடையே கடலில் நீந்துவதையும், பேராசையுடன் கப்பலின் பாயை தாங்கி நிற்கும் அகழியை பிடித்துக்கொண்டு தனது உயிரைக் காப்பாற்ற முயற்சிப்பதையும் காட்டியது. ◆ அந்த வயதான வங்கியாளர் நடந்ததையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, மேலும் சிந்திக்க ஆரம்பித்தார். "நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு அந்த சிறைவாசி தன் சுதந்திரத்தை மீளபெற்று விடுவார். ஒப்பந்தத்தின் படி அவருக்கு நான் இரண்டு மில்லியன்கள் கொடுக்கவேண்டிவரும். அவருக்கு கொடுத்தால், என்னக்கு எதுவும் இல்லாமல் போய்விடும். நான் முற்றிலும் அழிந்து போய்விடுவேன்". பதினைந்து வருடங்களுக்கு முன்பாக அவரது மில்லியன்கள் எல்லாம் கணக்கிற்கு அப்பாற்பட்டது. ஆனால், இன்று தன்னிடம் சொத்துக்கள் அதிகமாக உள்ளனவா அல்லது பொறுப்புக்களை அதிகமாக உள்ளனவா என்று தன்னையே கேட்க அவருக்கு பயமாக இருந்தது. பங்குச் சந்தையில் நம்பிக்கை இல்லாத சூதாட்டங்கள், எல்லைமீறிய ஊகங்கள், முதிர்ந்து கொண்டுவரவும் வயதில் அவராலேயே தாங்கமுடியாத அளவுக்குமீறி உற்சாகங்கள், எல்லாமே அவரது தற்பெருமையையும் அதிர்ஷ்டங்களையும் எதோ ஒரு அளவுக்கு வீழ்த்தி விட்டன. அச்சமற்ற, தன்னம்பிக்கை கொண்ட ஒரு கோடீஸ்வரராக இருந்து, பின் தனது முதலீடுகளின் ஒவ்வொரு உயர்விழும் தாழ்விலும் நடுங்கி, இப்போ நடுத்தர நிலையில் உள்ள ஒரு வங்கியாளராகிவிட்டார். "சபிக்கப்பட்ட பந்தயம்!" முணுமுணுத்தார். விரக்தியில் தன தலையைப் பிடித்துக் கொண்டு, "ஏன் அந்த மனிதன் இன்னும் சாகவில்லை? அவனுக்கு இப்போது நாற்பது வயதாகிறது. அவன் எனது கடைசி சதத்தையும் எடுத்துகொள்வான். நல்ல பெண்ணாய் பார்த்து மணந்து கொள்வான். வாழ்க்கையை அனுபவிப்பான். பணச்சந்தையில் சூதாடுவான்". ஒரு பிச்சைக்காரனைப்போல், பொறாமையுடன், அவனை பார்த்தபடி அவன் திருப்பித் திருப்பச் சொல்லும் அதே வாக்கியங்களை நான் கேட்கவேண்டி வரும். "என் வாழ்க்கையில் நான் அடையும் இன்பங்களுக்கு, உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நான் உதவ தயார்". "இல்லை. இது அளவுக்கு மீறியது. தான் கடன்களை தீர்க்க முடியாத நிலையிலிருந்தும், தனது அவமானங்களிலிருந்தும் மீள்வதற்கு தன்னிடம் இருக்கும் ஒரு வழி அந்த மனிதனின் மரணமே", மனதுள் கதறினார் அந்த வங்கியாளர். காலை மூன்று மணிக்கு அந்த மணிக்கூடு கூவியது அவருக்கு கேட்டது. எல்லோருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். குளிர்ந்த மரங்களின் சலசலப்புக்களைத் தவிர எந்த சத்தமும் கேட்கவில்லை. சத்தங்களை தான் உருவாக்காமல், பதினைந்து வருடங்களாக திறக்கப்படாத அந்த கதவின் சாவியை, தீயினால் பாதிக்கப்படமுடியாத அந்த பெட்டியிலிருந்து எடுத்து, மேலங்கியை அணிந்த விட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். தோட்டம் இருளாகவும் குளிராகவும் இருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. ஈரத்தன்மையுடனான கூர்மையான காற்று தோட்டத்தைச் சுற்றி ஊளையிட்டபடி மரங்களுக்கு ஓய்வு கொடுக்காமல் பறந்துகொண்டிருந்தது. வங்கியாளர் கண்களை மிகவும் பிரயத்தனப்பட்டு பார்த்தார். அவரால் நிலத்தையோ, மரங்களையோ, வெள்ளை சிலைகளையோ, விடுதியையோ எதையும் பார்க்கமுடியவில்லை. விடுதியின் வாசல் அருகே சென்று, இரு தடவைகள் விடுதி காவலாளியை அழைத்தார். எந்த பதிலும் வரவில்லை. காவலாளி, இந்த குளிர்ந்த காலநிலையிலிருந்து தப்பிக்க சமையலறையில் அல்லது செடிகளின் வளர்க்கும் கண்ணாடி வீட்டில் அடைக்கலம் தேடியிருப்பான் என்பது அவருக்கு வெளிப்படையாக தெரிந்தது. 'என் எண்ணத்தை நிறைவேற்றும் தைரியம் எனக்கு இருந்தால்', வங்கியாளர் நினைத்தார், 'சந்தேகம் முதலில் காவலாளியின் மீது தான் விழும்'. இந்த இருளிலும், அவர் படிகளையும் கதவையும் தடவி கண்டுபிடுத்து, விடுதியின் வாசலுக்குள் போய் சேர்ந்தார். பின்னர் அவர் தட்டுத்தடுமாறி விறாந்தையினூடே நடந்து சென்று ஒரு தீக்குச்சியை ஏற்றினார். அங்கு ஒரு ஆன்மா கூட இல்லை. அங்கொரு மெத்தை இல்லாமல் படுக்கை ஒன்று இருந்தது. மூலையில் ஒரு கருத்த வார்ப்பிரும்பு அடுப்பு ஒன்று இருந்தது. கைதிகளின் அறைகளுக்குச் செல்லும் கதவின் அழுத்தமுத்திரைகள் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தன. தீக்குச்சியில் தீ அணைந்ததும், வங்கியாளர், உணர்ச்சியில் உடல் நடுங்கியபடி, சிறிய ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தார். சிறைவாசியின் அறையில் மங்கலாக ஒரு மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. அவர் ஒரு மேசையில் அமர்ந்திருந்தார். பெரிதாக எதுவும் பார்க்கமுடியவில்லை. அவருடைய பின்புறமும், தலைமுடியும், கைகளும் மாத்திரமே பார்க்க கூடியதாக இருந்தது. திறந்தபடி பல புத்தகங்கள், மேசையிலும், சாய்மனை கதிரையிலும், மேசையின் அருகே கம்பளத்திலும் கிடந்தன. ஐந்து நிமிடங்கள் ஆகியும் சிறைவாசி ஒரு முறையேனும் அசையவில்லை. பதினைந்து வருட சிறைவாசம் அவரை ஒரே நிலையில் இருக்க பழக்கி இருக்கின்றது. வங்கியாளர் ஜன்னலில் தனது விரல்களால் தட்டினார். இருந்தும் சிறைவாசி அசைந்தாவது தனது பதிலை சொல்ல முயலவில்லை. பின், வங்கியாளர் கவனமாக அழுத்தமுத்திரைகளை உடைத்துவிட்டு சாவித்துவாரத்தில் சாவியை செலுத்தினார். துருப்பிடித்த பூட்டு உராய்கின்ற ஒலியை எழுப்ப கதவு கிரீச்சிட்டு திறந்துகொண்டது. வங்கியாளர், சிறைவாசியின் காலடிச் சத்தம் கேட்டு, அவரது வியப்பின் அழுகையையும் தான் கேட்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால், மூன்று நிமிடங்கள் சென்றும், அந்த அறை எப்பொழுதும் போல் அமைதியாகவே இருந்தது. உள்ளே போக தனது மனதை தயார் படுத்தினார். மேசையிலே ஒரு மனிதன், சாதாரண மனிதன் போலல்லாது அசையாமல் அமர்ந்திருந்தார். அவர் எலும்புக்கூடு போல் இருந்தார். அவரது தோல் எழும்பின் மேல் இறுக்கமாக போர்க்கப்பட்டிருந்தது. பெண்களைப்போல நீண்ட சுருள் முடியுடனும் நேர்த்தியில்லாத தாடியுடனும் இருந்தார். அவரது முகம் மஞ்சள் மண் நிறத்தில் இருந்தது, அவரது கன்னங்கள் குழி விழுந்திருந்தன. அவரது முதுகு நீண்டும் குறுகியும், அவரது நேர்த்தியில்லாத தலையை தாங்கி இருந்த கைகள் மிகவும் மெல்லியதாகவும் இருந்ததால் பார்ப்பதற்கே அச்சமூட்டுவதாக இருந்தது. அவரது தலைமுடியில் ஏற்கனவே வெள்ளை கோடுகளுடன் காணப்பட்டன. மெலிந்துபோய் வயதான தோற்றம் கொண்டவராக இருந்ததால் அவர் நாற்பது வயது தான் நிரம்பியவர் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அவர் தூக்கத்தில் இருந்தார். குனிந்திருந்த அவரது தலையின் முன்னே மேசையில் ஓர் தாள் இருந்தது. அதில் அழகிய எழுத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. 'பாவப்பட்ட ஜென்மம்', நினைத்துக்கொண்டார். "அவர் தூங்கியபடி பெரும்பாலும் தனக்கு கிடைக்கப்போகும் மில்லியங்களை கனவு காண்கிறாரோ என்னவோ. நான் இனி செய்ய இருப்பது, ஏற்கனவே அரைவாசி இறந்து போன இந்த மனிதனை கட்டிலில் தூக்கி வீசிவிட்டு, தலையணையால் மூச்சு திணற வைத்து விடுவது மாத்திரம் தான். எந்த தலைசிறந்த தடயவியலாளருக்கும் இது ஒரு வன்முறை மரணம் என்று கண்டுபிடிக்க எந்த அறிகுறியும் இருக்காது. ஆனால், அவர் என்ன தான் எழுதி வைத்துள்ளார் என்று முதல் பார்ப்போம்". வங்கியாளர், மேசையிலிருந்த தாளை எடுத்து வாசிக்கிறார். "நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு நான் எனது சுதந்திரத்தை மீளப்பெற்று, மற்றைய மனிதர்களுடன் கலந்துகொள்வேன். ஆனால், இந்த அறையை விட்டு வெளியேறி சூரிய உதயத்தை நான் காணும் முன், உங்களிடம் சில வார்த்தைகளை சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஒரு தெளிவான மனசாட்சியுடன் நான் உங்களுக்கு சொல்கிறேன், என்னை எப்பொழுதும் கவனிக்கிற இறைவனுக்கு முன், நான் சுதந்திரம் வாழ்க்கை ஆரோக்கியம் எல்லாவற்றையும் வெறுக்கிறேன். உங்கள் புத்தகங்களின் படி அவை யாவும் நல்ல விடயங்களே". "பதினைந்து வருடங்களாக, நான் தீவிரமாக உலக வாழ்க்கை பற்றி படித்துக்கொண்டிருந்தேன். நான் எந்த மனிதர்களையும் இந்த பூமியையும் பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், உங்கள் புத்தகங்களில், நான் வாசனையுள்ள திராட்சை மது அருந்தியிருக்கின்றேன். பாடல்களில் பாடியிருக்கிறேன். காடுகளில், கலைமான்களையும் பன்றிகளை வேட்டையாடியிருக்கின்றேன். பெண்களை காதலித்திருக்கின்றேன். உங்கள் கவிஞர்களும் மேதாவிகளும் மந்திரகோலால் உருவாக்கிய, மிகத்தூய்மையான, மேகங்கள் போன்ற அழகிகள், என்னைப்பார்க்க இரவில் வந்து, எனது காதுகளில், என் மூளையை மதுவினால் மயக்கத்தில் சுற்ற வைத்தது போல, பல அழகிய கதைகளை சொன்னார்கள்". "உங்களது புத்தகங்களினூடாக, எல்பர்ஸ் மலையினதும் மொண்ட் பிளாங்க் மலையினதும் சிகரங்களை தொட்டேன். அங்கிருந்து சூரிய உதயத்தையும், மாலை வானத்தை நிரப்புவதையும், சமுத்திரத்தையும், மலை உச்சிகள் தங்கம் கருஞ்சிவப்பு போன்ற வர்ணங்களில் மூழ்குவதையும் பார்த்தேன். என் தலைக்கு மேல் ஒளிரும் மின்னல்கள், புயல் மேகங்களைப் பிளவுபடுத்துவதையும் கண்டேன். பச்சை காடுகளையும், திறந்த வெளிகளையும், ஆறுகளையும், ஏரிகளையும், நகரங்களையும் கண்டேன். சைரன்கள் பாடுவதை கேட்டேன். மேய்ப்பர்களின் குழாய்களின் இசையையும் கேட்டேன். கடவுளைப் பற்றி என்னுடன் உரையாட என்னருகே பறந்த அழகான ஆவிகளின் சிறகுகளை நான் தொட்டேன்". உங்களது புத்தகங்களினூடாக, முடிவில்லாத அதலபாதாளத்தில் வீசப்பட்டேன். அற்புதங்கள் நிகழ்த்தினேன். கொன்றேன், நகரங்களை எரித்தேன். புது மதங்களை போதித்தேன். பல சாம்ராஜ்யங்களை வென்றேன். "உங்கள் புத்தகங்கள் எனக்கு ஞானத்தை அளித்தன. பல காலங்களாக மனிதனில் உருவான அமைதியற்ற சிந்தனை அனைத்தும் என் மூளையில் இப்போ ஒரு சிறிய திசைகாட்டியாக சுருங்கியுள்ளது. எனக்கு புரிகிறது, உங்கள் அனைவரையும் விட நான் புத்திசாலி என்று". "நான் உங்கள் புத்தகங்களை வெறுக்கிறேன். நான் இந்த உலகத்தின் அறிவுகளையும் ஆசீர்வாதங்களையும் வெறுக்கிறேன். இவை அனைத்தும் கானல் நீரைப்போல, வீணானது, மாயையானது, ஏமாற்றக்கூடியது. நீங்கள் பெருமைப்படலாம், புத்திசாலித்தனமானதாக நினைக்கலாம், சுகமானதாக இருக்கலாம். ஆனால், மரணம் உங்களை இந்த உலகத்தின் முன்னே இல்லாது துடைத்துவிடும், ஒரு எலி தரையின் கீழ் துளையிட்டு அதனூடே மறைந்து போய்விடுவதுபோல. உங்கள் செழுமை, உங்கள் வரலாறு, உங்கள் இறந்தும் அழிந்து போகாத மேதைகள் எல்லாமே எரிந்துவிடும். இல்லையேல், இந்த பூமியுடனே கடும் குளிரால் உறைந்துவிடும்". "நீங்கள் உங்கள் பகுத்தறிவை தொலைத்துவிட்டு தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். சில வகையான விசித்திரமான நிகழ்வுகளின் காரணமாக நீங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவீர்கள். தவளை இனங்களும் பள்ளி இனங்களும், ஆப்பிள் மரத்திலும் ஆரஞ்சு மரத்திலும் பழங்களுக்கு பதிலாக, வளர ஆரம்பிக்கும். வியர்க்கும் குதிரைகளின் வியர்வை நாற்றம் போல, ரோசாப்பூக்கள் மணக்கும். ஆகவே, வானத்தை பூமிக்கு மாற்றும் உங்கள் முயற்சிகளைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். நான் உங்களை உணர்ந்து கொள்ள விரும்பவில்லை". "நீங்கள் தங்கிவாழும் எல்லாவற்றையும் நான் வெறுப்பதை, செயலில் இப்பொழுது நான் நிரூபிக்கப்போகிறேன். ஒரு காலத்தில் சொர்க்கமாக நினைத்ததும், இன்று வெறுப்பதுவுமான அந்த இரண்டு மில்லியன்களை நான் துறக்கிறேன். பணத்துக்கான எனது உரிமையை நானே பறித்து வீசுவதற்காக, நான் இந்த சிறையிலிருந்து, விடுதலைக்காக குறிக்கப்பட்ட ஐந்து மணி நேரங்களுக்கு முன்பே வெளியேறி உடன்படிக்கையை முறித்துக்கொள்வேன்". வங்கியாளர் இதை வாசித்ததும், கடிதத்தை மேசையில் வைத்துவிட்டு, சிறைவாசியின் தலையில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அழுதபடி விடுதியிலிருந்து வெளியேறினார். வேறு எந்த நேரத்திலும், அவர் பணத்தை பணச்சந்தையில் அதிகளவில் தோற்போதும் கூட, தான் இப்படி அவமதிக்கப்பட்டதை அவர் உணரவில்லை. வீட்டை சென்றடைந்ததும் படுத்துக்கொண்டாலும், அவரது உணர்வுகளும் கண்ணீரும் அவரை பல மணிநேரம் தூங்கவிடவில்லை. விடிந்த பின் காவல்காரன் வெளிறிய முகத்துடன் ஓடி வந்து "அந்த சிறைவாசி ஜன்னல் ஊடே ஏறி, தோட்டத்துக்குள் நுழைந்து, வாசலை நோக்கி போய், பின்னே மறைந்து போனார்", என்று சொன்னான். வங்கியாளர், தனது வேலையாட்களுடன் விடுதிக்கு உடனே சென்று, சிறைவாசியின் வெளியேற்றத்தை நிச்சயித்துக்கொண்டார். அவசியமற்ற பேச்சுக்களை தவிர்க்க எண்ணிய வங்கியாளர், மேசையிலிருந்த கடிதத்தை எடுத்து, அதை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று தீ தீண்டா அலுமாரியில் வைத்து அதை பூட்டிக்கொண்டார். ◆◆ இந்த கட்டுரைக்கான கருத்துக்களை முகநூலில் பதிக்க : On Facebook இந்த கட்டுரைக்கான கருத்துக்களை மின்னஞ்சலில் பதிக்க : udhaydharshans@gmail.com |
Travel Memoir 8 Aug 2021 Hiking in Cader Idris, Wales Oct 2019 Jaffna Isles Seven Days On Two Wheels Jul 2016 Six Days in Maldives Islands Jul 2016 Ten Days in UAEmirates Jul 2016 Eight Days in Hongkong Jan 2015 Pettah Market Colombo, Sri Lanka Dec 2014 Sex Tourism in Thailand What I Witnessed Dec 2014 Bangkok to Singapore Backpacking |