ஷான் 
உதே 
 Shaan
Uday 
    
சிந்தனை துணுக்குகள்  1 

Jan 2021
எனது சில சிந்தனைகள்
சிறு வரிகளில்


சிறு கதைகள் தமிழாக்கம்
லொட்டரி சீட்டு
தமிழாக்கம்: ஷான் உதே
Read On PDF
பதிவேற்றியது
Dec 2022
சொற்கள்
1376
பக்கம் A5
5.50
பக்கம் A4
3.67
நிமிடம்
11
பார்வைகள்
872

கதாசிரியர் : அன்ட்டன் ப்பவ்லோவிச் செக்கோவ் (1860 - 1904, 44 வயது)
ரஷிய மொழியில் முதல் பதிவு : Mar 1887
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் : 1912, The Lottery Ticket
ஆங்கிலத்தில் மொழிமாற்றியவர் : கொன்ஸ்டன்ட் கார்னெட்
தமிழாக்கம்: 2022, ஷான் உதே

வான் டிமிட்ரிச், ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு வருமானத்தில் குடும்பத்துடன் மிகவும் திருப்தியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதர்.  அன்றைய இரவு உணவுக்குப் பிறகு சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் ஒன்றை படிக்கத் தொடங்கினார்.

மேஜையை சுத்தம் செய்தபடி, "இன்று செய்தித்தாளைப் பார்க்க மறந்துவிட்டேன்", என்று அவரது மனைவி அவரிடம் சொன்னாள்.

"வெற்றி இலக்கங்களின் பட்டியல் இருக்கிறதா என்று பாருங்கள்", அவள் மேலும் கேட்டாள்.

"ஆம், இருக்கிறது", என்றார் இவான் டிமிட்ரிச்.  "ஆனால் உங்கள் டிக்கெட் காலாவதியாகவில்லையா?".

"இல்லை.  செவ்வாய்கிழமை புதிதாய் ஒன்று எடுத்தேன்".

"இலக்கங்கள் என்ன?".

"தொடர் 9,499, இலக்கம் 26".

"எல்லாம் சரி....பார்ப்போம் ....9,499ம் 26ம்".

இவான் டிமிட்ரிச்சிற்கு லாட்டரி அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லை.  அவர், ஒரு கொள்கையாக, வெற்றி எண்களின் பட்டியலைப் பார்க்க சம்மதித்திருக்க மாட்டார்.  ஆனால், இப்போது, வேறு எதுவும் செய்யாததாலும், செய்தித்தாள் கிட்டிய தூரத்தில் இருந்ததாலும், எண்களின் பட்டியலில் தனது விரலை கீழ்நோக்கி கொண்டு சென்றபடி தனது இலக்கங்களை தேடினார்.  உடனே, அவரது சந்தேகத்தை கிண்டல் செய்வது போல், மேலே இருந்து இரண்டாவது வரியைத் தாண்டும் முன்பே, அவரது கண்ணில் 9,499 இலக்கம் சிக்கியது.  தன் கண்களையே நம்ப முடியாத அவர், லோட்டரி சீட்டின் எண்ணை முழுமையாக பார்க்காமல், அவசர அவசரமாகத் தன் மடியிலேயே பத்திரிகையை போட்டார்.  யாரோ அவருக்கு குளிர்ந்த தண்ணீரைக் கொடுத்தது போல, அவர் அடிவயிற்றில் ஒரு இனிமையான குளிர்மையையும் அதிகளவினிலான கூச்சத்தையும் உணர்ந்தார்.

"மாஷா, 9,499 இருக்கின்றது!", என்றார் ஒரு வெறுமையான குரலில்.

அவரது மனைவி ஆச்சரியத்துடனும் பீதியுடனும் இருந்த அவரது முகத்தைப் பார்த்து, அவர் கிண்டல் செய்யவில்லை என்பதை உணர்ந்தார்.

அவள் முகம் வெளிர் நிறமாக மாறிவிட்டது.  மடிந்திருந்த மேசை துணியை மேசையில் வைத்துவிட்டு கேட்டாள், "9,499?"

"ஆம், ஆம்....அது உண்மையாகவே இருக்கிறது!".

"சீட்டின் எண்?".

"ஓ, ஆமாம்! சீட்டின் எண்ணும் உள்ளது.  ஆனால், இரு....கொஞ்சம் பொறு...இல்லை...நான் சொல்கிறேன்...ஆனால்..எங்கள் தொடரின் இலக்கம் இருக்கின்றது...எப்படியோ...உனக்கு புரிகின்றது....".

அவரது மனைவியைப் பார்த்து, இவான் டிமிட்ரிச் ஒரு விளையாட்டுப் பொருளைக் காட்டும்போது ஒரு குழந்தை எப்படி பிரகாசமாக சிறிக்குமோ அதைப்போல ஒரு அர்த்தமற்ற புன்னகையை வழங்கினார்.  அவர் மனைவியும் புன்னகைத்தாள்.  அவர் தொடரை மட்டுமே கண்டது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது, வெற்றிக்கான சீட்டின் எண்ணைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை.  அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதென நம்பிக்கையுடன் தன்னைத்தானே துன்புறுத்துவதும், வேதனைப்படுத்துவதும் மிகவும் இனிமையானது, மிகவும் சிலிர்ப்பானது!

நீண்ட அமைதிக்குப் பிறகு, "இது எங்கள் தொடர்", என்று இவான் டிமிட்ரிச் கூறினார்.  "எனவே நாங்கள் வெற்றி பெற்றதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது.  இருப்பினும், இது ஒரு நிகழ்தகவு மட்டுமே, ஆனால் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன".

"சரி, இப்போது பார்ப்போம்!".

"சற்று நேரம் பொறுங்கள்.  நாம் ஏமாற்றமடையக்கூடிய தருணங்கள் நிறைய இருக்கிறது.  இது மேலே இருந்து இரண்டாவது வரியில் உள்ளது, எனவே பரிசு எழுபத்தைந்தாயிரம் ரூபிள்கள்.  அது பணம் அல்ல, அதிகாரம், மூலதனம்! ஒரு நிமிடத்தில் நான் பட்டியலைப் பார்ப்பேன், அங்கே 26 இருக்கும்.  என்ன? நான் சொல்கிறேன், நாம் உண்மையில் வெற்றி பெற்றால் என்ன செய்வது?".

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து மௌனமாக புன்னகை பூத்தார்கள்.  தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நினைப்புகள் அவர்களை திகைப்பில் ஆழ்த்தியது.  அவர்கள் இருவருக்குமே அந்த எழுபத்தைந்தாயிரம் ரூபிள்களால் என்ன பலன்.  எதைத்தான் வாங்குவார்கள்.  எங்குதான் செல்வார்கள்.  அவர்களாலேயே அதை சொல்ல முடியாது.  அவர்கள் இதை கனவு கண்டிருக்கவும் மாட்டார்கள்.  அவர்கள், தொடர் இலக்கம் 9,499த்தையும், வெற்றிப்பணம் 75,000 ரூபிள்களையும் மாத்திரம் நினைத்து கற்பனைக்குள் போய்விட்டார்கள்.

வான் டிமிட்ரிச், பத்திரிகையை கையில் பிடித்துக்கொண்டு, மூலைக்கு மூலை பல முறை நடந்தார்.  அவர் தனது எண்ணங்களிலிருந்து மீண்ட பிறகு, கொஞ்சம் கனவு காணத் தொடங்கினார்.

"நாம் வெற்றி பெற்றால், அது ஒரு புதிய வாழ்க்கையாக இருக்கும், அது ஒரு மாற்றமாக இருக்கும்.  இந்த சீட்டு உன்னுடையது, என்னுடையதாக இருந்திருந்தால், முதலில், கட்டாயமாக, இருபத்தைந்தாயிரம் ரூபிள்களை வீடு வாங்க செலவிடுவேன்.  உடனடி செலவுக்கு பத்தாயிரம் செலவிடுவேன்.  புதிய வீட்டு தளபாடங்கள், பயணங்கள், கடன்களை கட்டிமுடித்தல், இதை போன்ற பல.  மிஞ்சிய நாற்பதாயிரத்தை வங்கியில் வட்டிக்கு போடுவேன்".

"ஆமாம், ஒரு பெரிய வீடு, அது நன்றாக இருக்கும்", என்று அவன் மனைவி கீழே அமர்ந்து தன் கைகளை மடியில் போட்டபடி சொன்னாள்.

"எங்கேயாவது துலா அல்லது ஓரியோல் மாகாணங்களில்....நமக்கு கோடைகால பங்களா தேவையில்லை, அது எப்போதும் வருமானத்தைக் கொண்டுவந்தாலும்".

அவனது கற்பனையில் பல காட்சிகள் குவியத்தொடங்கின.  ஒவ்வொன்றும் கடந்ததை விட மிகவும் அருமையாகவும் கவிதைத்தன்மையுடனும் இருந்தன.  இந்த காட்சிகளில் எல்லாம், அவர் நன்றாக உண்பவராகவும், அமைதியானவராகவும், ஆரோக்கியமானவராகவும் தான் இருப்பதாக உணர்ந்தார்.  இந்த கற்பனையில், ஒரு பனிக்கட்டி போன்ற குளிர்ச்சியான ஒரு கோடைகால பாணம் அருந்தியபடி, ஒரு ஓடைக்கு அருகில் இருக்கும் ஒரு தேசி மரத்தின் நிழலின் கீழ், எரியும் மணலின் அண்ணாந்து பார்த்தபடி படுத்திருக்கிறார்....அங்கு கொடிய வெப்பம்....அவரின் மகனும் மகளும், ஊர்ந்து நகர்ந்தபடி, மணலில் தோண்டி விளையாடி அல்லது புல்லில் வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  இன்றையோ, நாளையோ, மறுநாளோ வேலைக்குச்செல்லத் தேவையில்லை என்று, எதையுமே நினைக்காமல், இனிமையாக மயங்கிக் கிடக்கிறார்.  அல்லது, அசையாமல் இருந்ததனால் களைத்துப்போய், அவர் வைக்கோல் புல்தரைக்கோ அல்லது காட்டுக்குள் காளான்கள் பறிப்பதற்காக செல்கிறார், அல்லது மீனவர்கள் வலைபோட்டு மீன் பிடிப்பதைப் பார்து ரசிக்கிறார்.  சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரம், அவர் ஒரு துவாலையையும் சோப்பையும் எடுத்தபடி குளியல் கொட்டகையை நோக்கி நடக்கிறார்.  அங்கு அவர் தனது ஆடைகளை மெதுவாக அவிழ்த்து, மென்மையாக தனது வெற்று மார்பை கைகளால் தேய்த்தபடி, தண்ணீருக்குள் மூழ்குகிறார்.  தண்ணீரில், ஒளிபுகா நுரை வட்டங்களுக்குள், சிறிய மீன்கள் அங்கும் இங்கும் நீந்துகின்றன.  பச்சை தண்ணீர் தாவரங்கள் தலையை அங்குமிங்கும் ஆடுகின்றன.  குளித்து வெளியே வந்த பின், உண்பதற்கு பாலேடு கலந்த தேநீருடன் பலவகை தின்பண்டங்களும் உள்ளன.  மாலையில் அண்டை வீட்டாருடன் சேர்ந்து ஒரு சின்ன மதுபானம் அருந்துகிறார், அல்லது ஒரு தனியே சின்ன மாலை உலா போகிறார்.

கணவனைப் போல மனைவியும் கனவுகள் பல கண்டாள்.  “ஆமாம், ஒரு பங்களா வாங்கினால் நன்றாக இருக்கும்” என்ற நினைவுகளில் அவளும் மயங்கிக்கிடந்தது அவள் முகத்திலிருந்தே தெரிந்தது.

இவான் டிமிட்ரிச், இலையுதிர் காலத்துடனும், அதன் மழையுடனும், அதன் குளிர்மையான மாலைகளுடனும், இலையுதிர்காலங்களில் தோன்றும் செயின்ட் மார்ட்டின் கோடைகாலங்களுடனும், தன்னை இணைத்துப்பார்த்துக்கொண்டார்.  அந்த பருவகாலங்களில் தான் தோட்டத்திலும் ஆற்றங்கரையிலும் நீண்ட நேரம் நடந்து செல்லவேண்டும், இதனால் நன்கு குளிர்ந்து பிடித்துவிடும்.  பின்னர் வீடு வந்து ஒரு பெரிய கண்ணாடி குவளையில் வடித்து எடுக்கப்பட்ட வொட்காவைக் குடித்து, உப்பு சேர்க்கப்பட்ட காளான் அல்லது வெள்ளரிக்காய் ஊறுகாய்களை உண்ட பின்னர், மீண்டும் குடிக்க வேண்டும்.  பிள்ளைகள் வீட்டுத்தோட்டத்திலிருந்து காரட்டுகளையும் புதிய மண் வாசனையுள்ள முள்ளங்கிகளையும் எடுத்துக்கொண்டு ஓடி வருவார்கள்.  அவைகளை சமைத்து சாப்பிட வேண்டும்.  பின்னர், அவர் சோபாவில் நீளமாக கால் நீட்டி படுத்தபடி, மற்றும் சில மாதாந்த படங்கள் கொண்ட பத்திரிகைகளின் பக்கங்களைப் நிதானமாக புரட்ட வேண்டும்.  அல்லது, அந்த புத்தகங்களால் தன் முகத்தை மூடிக்கொண்டு, இடுப்பளவுச் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துவிட்ட பின், ஒரு குட்டித்தூக்கத்தில் ஆழ்ந்து விடவேண்டும்.

இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வரும் வெப்பமான காலநிலையை தொடர்ந்து மேகமூட்டமான, இருண்ட வானிலை வர ஆரம்பித்தது.  இரவும் பகலும் தொடர்ந்து மலை பெய்தது.  இலை உதிர்ந்து போயிருந்த மரங்களெல்லாம் அழுதன.  காற்று ஈரப்பதனுடனும் குளிராகவும் இருந்தது.  நாய்களும் குதிரைகளும் கோழிகளும் நனைந்து மனச்சோர்வாக இருந்தன.  நடப்பதற்கு அங்கு இடம் எங்கும் இருக்கவில்லை.  ஒருவரும் வெளியே போக முடியாத நிலை.  அறையினுள் தான் மேலும் கீழும் நடக்கவேண்டி வரும்.  விரக்தியுடன் வெளிறிய ஜன்னலைப் பார்த்தால், அது மந்தமாக இருக்கிறது.

இவான் டிமிட்ரிச், நின்று தன மனைவியை பார்த்தார்.

"நான் வெளிநாடு போக வேண்டும்.  உனக்கு தெரியுமா மாஷா", என்றார்.

அவர், இலையுதிர்காலங்களின் இருண்ட காலங்களில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு போவது எவ்வளவு மகிழ்ச்சியான விடயம் என்று சிந்திக்க ஆரம்பித்தார்.

"நானும் கட்டாயம் வெளிநாடு போகவேண்டும்", அவர் மனைவி சொன்னார்.  "முதலில் சீட்டின் இலக்கங்களை பாருங்கள்".

"நில்...நில்...".

அறையை சுற்றி நடந்து யோசித்துக்கொண்டே இருந்தார்.  "அவர் மனைவி உண்மையாகவே வெளிநாடு போய் விட்டாள் என்றால்?", அவர் மனதில் தோன்றியது.  தனிமையில் பயணிப்பது இனிமையானது.  வெளிச்சமான சமுதாயத்தில், நிகழ்காலத்தில் எதிலும் கவலையில்லாமல் வாழும் பெண் இவள், தன் குழந்தைகளைத் தவிர வேறெதையும் பற்றி யோசிப்பதும் பேசுவதும் இல்லை, எதற்கும் பெருமூச்சு விடுகிறாள், தூரங்களை திகைப்புடன் பார்த்து நடுங்குகிறாள்.

இவான் டிமிட்ரிச், தனது மனைவியை, ரயிலில் ஏராளமான பார்சல்களுடனும், கூடைகளுடனும், பைகளுடனும் பயணிப்பதை கற்பனை செய்து பார்த்தார்.அவள் காரணமின்றி பெருமூச்சு விடுவாள்.  ரயிலின் சத்தத்தால் தன் தலை வலிக்கிறது என்பாள்.  இவ்வளவு பணம் செலவழித்துவிட்டென் என்று முறையிடுவாள்.  புகையிரத நிலயங்களில் தான் நிச்சயம் சுடு தண்ணீருக்காகவும், பானுக்கும் வெண்ணைக்கும் தொடர்ந்து ஓட வேண்டியிருக்கும்.  அது மிகவும் விரும்பிய உணவாக இருந்தாலும், அவள் அதை சாப்பிட மாட்டாள்.

"ஒவ்வொரு தூரத்திலும் அவள் என்னிடம் கெஞ்சுவாள்", மனைவியை பார்த்தபடி அவர் நினைத்தார்.  "இந்த லோட்டரி சீட்டு அவளுடையது.  என்னுடையது அல்ல.  அதுமட்டுமின்றி, அவள் வெளிநாடு சென்று என்ன பயன்? அவளுக்கு அங்கே என்ன வேண்டும்? அவள் விடுதிக்குள்ளேயே தன்னை மூடிக்கொள்வாள்.  தனது பார்வையிலிருந்து என்னை வெளியே விடவும் மாட்டாள்.  எனக்கு தெரியும்!".

தனது வாழ்க்கையில் முதல்முறையாக தனது மனைவி வயது முதிர்ந்தவளாகவும் எதையும் செய்ய முடியாதவளாகவும் இருக்கிறாள் என அவர் மனதில் பதிய ஆரம்பித்தது.  மேலும் அவள் முழுவதும் சமையல் வாடையால் கிடந்தாள்.  அவர் இன்னும் இளமையாகவும், புதியதாகவும் ஆரோக்கியமாகவும் தான் இருப்பதாகவும், மீண்டும் தான் திருமணம் செய்யக்கூடியவராக இருப்பதாகவும் நினைத்தார்.

"நிச்சயமாக, இதெல்லாம் முட்டாள்தனமான எண்ணங்கள்", அவர் நினைத்தார்.  "ஆனாலும், அவள் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்னதான் லாபம்? இன்னும் சொன்னால், அவள் நிச்சயமாக போவாள்....என்னால் அதை நினைத்து பார்க்க முடியும்....நிஜத்தில், அது எல்லாம் அவளைபொருத்தது, அது 'நேபிள்ஸ்'ஸா அல்லது 'க்ளின்'னா என்று..  அவள் எப்போதும் எனக்கு குறுக்கே தான் இருப்பாள்.  நான் அவளிடம் தங்கி இருக்கத்தான் வேண்டி வரும்.  என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, ஒரு சாதாரண பெண்ணைப்போல், அவள் பணம் கிடைத்தவுடன் அதைப் பூட்டிவைப்பாள்....அவள் தனது உறவினர்களை நன்றாக கவனித்துக்கொண்டு என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு பழி வாங்குவாள்".

இவான் டிமிட்ரிச், அவளது உறவினர்களை ஒரு முறை சிந்தித்துப்பார்த்தார்.  செய்தி கேள்விப்பட்டவுடன், அவளது கேவலம் பிடித்த சகோதர சகோதரிகள், அத்தைகள், மாமாக்கள் எல்லாம் எங்கள் வாழ்க்கைக்குள் ஊர்ந்து வரத்தொடங்கிவிடுவார்கள்.  பிச்சைக்காரர்கள் போல அணுங்கத் தொடங்கிவிடுவார்கள்.  எண்ணெய் பூசப்பட்டது போல், பாசாங்குத்தனமான புன்னகையுடன் ஆரம்பிப்பார்கள்.  கேவலமான, வெறுக்கத்தக்க மக்கள் அவர்கள்.  அவர்களுக்கு ஏதாவது கொடுத்தால் கூட, இன்னும் அதிகமாகக் கேட்பார்கள்.  அவர்களுக்கு எதுவும் கொடுக்கப்படாவிட்டால், திட்டுவார்கள், அவதூறு செய்வார்கள், எல்லா வகையான துரதிர்ஷ்டங்களையும் எங்கள் வாழ்க்கையில் நடக்கவேண்டுமென விரும்புவார்கள்.

இவான் டிமிட்ரிச், தன உறவினர்களையும் ஒருமுறை யோசித்துப்பார்த்தார்.கடந்த காலங்களில் பாரபட்சமின்றி பார்த்த அவர்களது முகங்கள், இன்று வெறுப்பூட்டுவதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருந்தது.

"என் உறவினர்களும் வெறும் ஊர்வன இனத்தைச் சேர்ந்தவர்கள்", என்று அவர் நினைத்துக்கொண்டார்.

அவர் மனைவியின் முகம் கூட, அவருக்கு இப்போ, வெறுப்பூட்டுவதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருந்தது.  அவளுக்கு எதிரான பகை உணர்வுகள் அவர் இதயத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது.

அவர் தீங்கான முறையில் இப்போ சிந்திக்க ஆரம்பித்தார்.  "அவளுக்கு பணத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது.  அத்தோடு, அவள் ஒரு கஞ்சத்தனம் நிறைந்த பெண்.  அவளுக்கு பணம் வந்து விட்டால், எனக்கு நூறு ரூபிள்கள் மாத்திரம் தந்து விட்டு மிகுதியை ஒளித்து வைத்து திறப்பால் பூட்டியும் விடுவாள்".

அவர் இப்போ தன மனைவியை வெறுப்புடன் பார்த்தார், எந்த வித புன்னகையும் இல்லாமல்.  அவளும், அவரை வெறுப்புடனும் கோபத்துடனும் பார்த்தாள்.  அவளுக்கும், அவளது பகல் கனவுகளும், திட்டங்களும், பிரதிபலிப்புகளும் இருந்தன.  தனது கணவனுக்கு என்ன கனவுகள் இருந்தது என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.  தனது வெற்றிப்பணத்தை யார் முதலில் கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள் என்றும் அவளுக்கு தெரிந்திருந்தது.

"மற்றயவர்களுடைய வீழ்ச்சியில் பகல் கனவு காண்பது நன்றாகத்தான் இருக்கின்றது".  அவளது கண்கள் அதைச்சொன்னன.  "இல்லை.  துணிவு கொள்ளாதே".

அவர், அவள் பார்வையை புரிந்துகொண்டார்.  வெறுப்புணர்வு மீண்டும் அவர் நெஞ்சில் ஊசலாட ஆரம்பித்தது.

அவர், தன மனைவியை வெறுப்பூட்டுவதற்காக, பத்திரிகையின் நாளாம் பக்கத்தை திருப்பி வெற்றியடைந்த மனநிலையில், "தொடர் 9499, இலக்கம் 46.  26 இல்லை", என்றார்.

வெறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் ஒரேயடியாக மறைந்தது போயின.  இவான் டிமிட்ரிச்க்கும் அவரது மனைவிக்கும் இப்போ அவர்களின் அறைகள் இருட்டாகவும் சிறியதாகவும் தாழ்வானதாகவும் இருப்பதாக தோன்றத் தொடங்கியது.  அவர்கள் உண்ணும் உணவுகள் எந்தவித நல்லவைகளை செய்யாமல், வயிற்றிலேயே தங்கிவிடுவது போல அவருக்கு தோன்றியது.  மாலை நேரங்கள் கூட நீண்டதாகவும் சோர்வானதாகவும் இருப்பதாக தோன்றியது.

"அதற்கான அர்த்தம் என்ன?", என்றார் இவான் டிமிட்ரிச், மோசமானதொரு நகைச்சுவையுடன்.  "காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் காகிதத் துண்டுகளும், துகள்களும், உமிகளும் இருக்கின்றன.  அறைகள் எப்போதும் கூட்டப்படுவதில்லை.  வெளியே கட்டாயம் போக வேண்டியதாய் இருக்கின்றது.  சாபங்கள் என் ஆன்மாவை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும்! நான் போய் ஆஸ்பென் மரத்தில் முதல் தொங்கப்போகிறேன்.!".

◆◆

இந்த கட்டுரைக்கான கருத்துக்களை மின்னஞ்சலில் பதிக்க : udhaydharshans@gmail.com