ஷான் 
உதே 
 Shaan
Uday 
    
சிந்தனை துணுக்குகள்  1 

Jan 2021
எனது சில சிந்தனைகள்
சிறு வரிகளில்


வாழ்க்கை நினைவுகள்
என்னுள், என்னைப்போல் ஒருவன்
ஷான் உதே
Read On PDF
பதிவேற்றியது
Jan 2022
சொற்கள்
548
பக்கம் A5
2.19
பக்கம் A4
1.46
நிமிடம்
4
பார்வைகள்
520

ல காலமாக மனதில் ஊர்ந்து கொண்டிருந்த நச்சரிப்புகள். எழுத வேண்டும். அது தானோ என்னவோ என்னை இங்கு அழைத்து வந்து நிற்கின்றது. எழுதுவது புதிதல்ல எனக்கு. எழுதியிருக்கிறேன். ஆனால் அவைகள் வாசிக்கப்படுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முனையவில்லை. யாரிடமாவது வாசிக்க கேட்டு, அவர்கள் முகம் சுளித்தாலும், அது ஒன்றும் நெஞ்சை நோகடிக்கிற பிரச்சனை இல்லை. ஆனால், எழுத வேண்டும். நான் எழுதும் எழுத்துக்கள் எல்லாம் வாசிக்கப்படுவதற்காகவோ அல்லது எழுதிய நானும் நேசிக்கப்படுவதற்காகவோ எழுதப்படவேண்டிய அவசியமில்லை. அவை யாவும் எனது சுதந்திர மனப்பான்மையின் வெளித்தோற்றம்.

எழுத்துவதற்கும் நான் வாசிக்கப்படுவற்கும் முன்பு நான் யார் என்ற தேடல் அவசியம். தேடுவதட்கு தனிமை என்ற சந்தர்ப்பங்களும் நிறையவே வந்தமைந்தன. அதை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டேன். என் நிலை அறியாமல் என்னை முன் கொணர விரும்பவில்லை. பிறர் என்னை நான் யார் என்று எனக்கே சொல்லும் நிலைமையை தவிர்க்க நினைத்து அந்த "நான்"ஐ தேடுவதில் காலம் சிலவற்றை கடக்கவிட்டுவிட்டேன். சிலருக்கு அது "அகங்காரம்". சிலருக்கு அது "தன் நிலை அறிந்தவன்".

இப்போ அந்த "நான்" நிறையவே என்னிடம் தேங்கியிருக்கின்றது. இன்று தேடிய அந்த "நான்"கள் தடமாக வைத்து என்னெழுத்துக்களை வாசித்து ரசிக்க அல்லது வாசித்து வசைபாட தளம் அமைத்து வைத்துள்ளேன். என் எழுத்துக்களில் அந்த நான் நிறையவே பிரதிபலிக்கும்.

என்னை புரிந்த சமயங்களில் நான் எழுதியது அதிகம். புரியாத நேரம் நான் வாசித்தது தான் அதிகம். இரண்டு நிலைகளும் என்னை வளர்த்த நிலைகள் தான். ஆகவே என்னை புரியாமல் நான் அளந்த நேரங்களும் நல்ல நேரங்களே.

இப்போ இது இணையதள உலகம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்த்து வைத்திருக்கின்றேன் சில வாசகர்களை. சிலர் மீள வருகிறார்கள் என் ஆக்கங்களை வாசிக்க. கூடவே இப்போ என்னையையும் வாசித்து வைத்திருக்கின்றார்கள்.

சொல்வதற்கு பல விடயங்கள் இருக்கிறதே என்பதற்காக, சும்மா எழுதி தள்ளவும் முடியாது. சுற்றம் பத்தும் ஒரு முறை துலாவிப்பார்க்க வேண்டி இருக்கின்றது.

சுற்றி இருப்பவர்களிடமிருந்து பலவித வர்ணங்களில் விமர்சனங்கள்.

ஆழமாக ரசித்து வாசித்தவர்களின் நேர்மறை விமர்சனங்கள் எழுதுவதற்கு உந்துதலாக இருக்கின்றது.

"எழுதுங்கள். இன்னும் எழுதுங்கள். நன்றாகத்தான் இருக்கிறது."

இவர்களுள் நேர்மையாக பிழைகளை சுட்டிக்காட்டும் சிலரம் உண்டு. அவைகளும் வரவேற்கத்தக்கவையே.

"பெரிய வாக்கியங்களும் வேண்டாம். பெரிய பத்திகளும் வேண்டாம். சிறு வாக்கியங்களும் சின்ன பத்திகளும் வாசிப்பதை இலகாக்கும்."

ஆயினும், 'அ'வினதும் 'ஆ'வினதும் இடை தூரம் தெரியாதவர்கள் கூட குறுக்கே வந்து நிற்கிறார்கள். இவர்களுக்கு எழுத்துக்கள் என்றால், ஒவ்வாமையும் பயமும்.

"அவன் எழுதிகிறவன். அவனை உள்ளே எடுக்காதே. எங்களைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்வான். பின் எழுதியும் விடுவான்."

"என்னப்பா இவன் இதை எல்லாத்தையும் சொல்கிறானே."

எழுதுவதன் மீது எதுவித பற்றுதல் இல்லாமலும், எழுதப்பட்டவைகள் எல்லாவற்றையும் ஆழமாக படிக்காமலும், மேலோட்டமாக கிளறிப்பார்த்தவர்களால் விமர்சிக்கப்படுபவை, அதிகமாக கீழே தள்ளிவிடத்தான் பார்க்கின்றன. தங்கள் தாழ்புணர்ச்சிகளை தணிக்க, "எங்கேயிருந்து சுட்டாய்" என்று தாழ்த்தப்பார்ப்பார்கள். சுட்டதல்ல, சொந்த சிந்தனை தான் என்று நிரூபிக்க, சொந்த வாழ்க்கை அனுபவங்களை கொட்டி தீர்க்க வேண்டியிருக்கிறது. அதுவும் அவர்களுக்கு பிரச்சனை.

"இங்க பார் தன்னைப்பற்றியே இவ்வளவு சொல்கிறவன், எங்களைப்பற்றியும் சொல்லாமல் விடவா போகிறான், எங்களை பற்றியும் ஆங்காங்கே சொல்லாமல் சொல்லுகிறான் போல" என்பார்கள்.

எழுத்துலகுக்குள் நுழையும் புதிய எழுத்தாளர்களுக்கு இவை பெரும் ஆரம்பகால சவால்கள். அவர்களுக்கு தங்கள் முதல் வட்டத்துக்குள் இருக்கும் முகம் தெரிந்த எதிர்ப்பாளர்கள் பலரின் குரைப்புகளையும் கனைப்புகளையும் நிறையவே கேட்கவேண்டிய நிலை. இவர்களை மிருக வெறியுடன் கடந்து வந்தவர்கள், எழுத்துலகில் தனித்து நின்றதும், மிகுந்த நலிவுகலுடன் கடக்க தவறியவர்கள், எழுத்துலகிலிருந்து தவறிப்போனதும், எழுத்துலகம் கண்ட சான்று.

"எழுதுவதும் தீதே", எனும் எண்ணங்களுடன் சுற்றிலும் இவர்களைப்போல் பலரின் சகவாசம். எந்தப்பக்கமும் வாசலற்ற நான்கு சுவர்களுக்குள் "சுதந்திரமாக வாழ்கிறோம்" என்ற நினைவுகளுடன் வாழும் அவர்களிடையே அகப்பட்டுக்கொண்டு, நானும் அவர்களைப்போல் ஒருவனாய், அவர்களுடன் சேர்ந்து மூடிய திரைக்குள் நாடகம் ஆடுவதை விட, யார் என்ன சொன்னால் என்ன, ஓர் கருப்பாடாக ஓரங்கட்டப்பட்டாலும் கவலை இல்லை, எழுதித்தள்ளிவிடலாம் என்ற ஓர் எழுத்துலக போராளியின் எண்ணோட்டங்கள் என்னுள் இப்போ. இது முதிர்ந்துபோன வயதில் வரும் தெளிந்துவிட்ட மனநிலையோ என்னவோ.

யாரையுமே சங்கடப்படுத்த வேண்டாம் என்றதனால் தானோ, பல காலமாக நிறையவே கணனியில் மாத்திரம் கிறுக்கித்தள்ளிக்கொண்டு இருந்தேன். அதில் எனது பயண அனுபவங்களை மாத்திரம் பொருக்கி எடுத்து, அப்பப்போ இணையதளங்களில் வெளிக்கொணர்ந்து கொண்டிருந்தேன். ஆனால், நினைவில் வரைந்திருந்த பயணத்திட்டங்கள் எல்லாம், செயலில் நிறைவேற்றப்பட முடியாமல் போகக்கூடிய உலகின் இன்றைய இஸ்திரமற்ற நிலை. கோவிட் வைரஸின் அட்டகாசங்களின் பின் பலமடங்காகிப்போன பொருளாதார செலவினங்கள். சுயநல ஆட்சியாளர்களின் செயல்பாட்டால் தூரத்தே தொலைந்து போன பல அழகிய தேசங்கள். இப்படி பூமி தலை கீழாய் சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் எனது பயணங்களும் கிடப்பில் கிடக்கின்றன. எனது பயண எழுத்துக்களும் வளர வழியின்றி தங்கி நிற்கின்றது.

வேறு வழி, தமிழ் எழுத்துலகத்துக்குள் மீண்டும் பயணிப்போம் என்றதன் விதை தான் இந்த ஆக்கம். தமிழில் எழுதவேண்டும் என்பது பல காலமாக மனதில் ஊர்ந்து கொண்டிருந்த நச்சரிப்புகள். பாடசாலை நாட்களில் உருவான தமிழில் எழுதும் காதல், இன்று வரை துருப்பிடித்து போகாமல் என்னுள் வாழ்ந்தது பெரியதோர் விடயம். அவைகளுக்கும் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கின்ற முயற்சி. தமிழ் சொற்களை ஒன்றுடன் ஒன்றை கோர்த்து அழகு பார்க்கும் ஒரு சின்ன முயற்சி.

◆◆

Related Articles:
எழுதுவதும் தீதே


இந்த கட்டுரைக்கான கருத்துக்களை மின்னஞ்சலில் பதிக்க : udhaydharshans@gmail.com