|
![]() |
|
|
சிறு கதைகள் தமிழாக்கம் 3 Dec 2022 பந்தயம் மூலம்: அன்ட்டன் ப்பவ்லோவிச் செக்கோவ் Dec 2022 லொட்டரி சீட்டு மூலம்: அன்ட்டன் ப்பவ்லோவிச் செக்கோவ் Dec 2022 துன்பம்! யாருக்கு நான் என் சோகத்தை சொல்வேன் மூலம்: அன்ட்டன் ப்பவ்லோவிச் செக்கோவ் பயண நினைவுகள் 2 Dec 2022 அப்பாவுடன் யாழ்ப்பாணத்தை நோக்கி, என் முதல் நீண்ட தூர ரயில் பயணம் Jul 2022 காத்திரு மீண்டும் வருவேன் வாழ்க்கை நினைவுகள் 4 Sep 2023 தயவு செய்து என்னை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும் Jan 2022 என்னுள், என்னைப்போல் ஒருவன் Jan 2022 எழுதுவதும் தீதே Aug 2020 பாடல் வரிகள் |
தொலைத்தொடர்பு சமிக்ஞைகள் அற்ற பள்ளத்தாக்கான மலையடிவாரத்தில் தான் அந்த கூடார வாசம். அதனால், வெளியே வாழும் மாக்கள், சமூக வலைத்தளங்களில் என்னதான் பண்ணுகிறார்கள் என்று உளவு பார்க்க முடியாத அவலநிலை. மின்சாரம் இங்கே இல்லையென்று தெரிந்ததால், கணணியையும் கொணரவில்லை. கைபேசியில் வெறும் சுடோக்கு(Sudoku) விளையாடிப்பார்த்தேன். அந்த விருப்பமும் சில நிமிடங்களில் அலுப்புத்தட்டிவிட, வாசிக்கலாமென்று கொண்டுவந்த புத்தகத்தை கையிலெடுத்தால், பதியவில்லை மனம் அதிலே. மலையின் உச்சம் வரை ஏற முடியாமல் போன விரக்தியின் வெளிப்பாடோ என்னவோ. வெளியே, பொடபொடவென கூடாரத்தின் நெகிழிக்கூரையில் கொட்டிக்கொண்டிருந்த மழை, அதை கிழித்துவிடுமோ என்ற நிலையையும், புஸ்புஸ் என பறந்துகொண்டிருந்த காற்றும் கூடாரத்தை அள்ளிக்கொண்டு போய்விடுமோ என்ற நிலையையும், மல்லாக்கப்படுத்தபடி, ஒருசில நிமிடங்கள் ரசித்துக்கொண்டிருந்தேன்.காற்றின் ரீங்காரங்களும், மழையின் பறைகளும், குளிரின் இதமும், தனிமையின் சுவைகளும் கூட்டாகச்சேர்ந்த ஒரு நிலை, சிந்தனைகளை எங்கெங்கோ உலாவித்திரிய வழி அமைத்துக்கொடுத்துவிட்டது. ஈக்கள் போல, அங்கேயிருந்து இங்கே, இங்கேயிருந்து அங்கே என்று மனம், தன்பாட்டுக்கு பறந்து, இறுதியில், நான் இதுவரை காலமும் வாசித்த கதைப்புத்தகங்களின் மீது வந்து தேங்கிவிட்டது. வாழ்க்கையின் வந்து போன நோவுகள் எதையும் உணர தேவையின்றி அந்நாட்களை இதமாக கடந்து போக வைத்த கதைப்புத்தகங்கள், பரீட்சை நெருங்கும் காலங்களில் கூட பாடப்புத்தகங்களை அண்ட விடாமல் தன்னுள் அடக்கி வைத்த தவறை செய்த கதைப்புத்தகங்கள், எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக என் கண் முன்னே வந்து சினிமா காட்ட தொடங்கின. கொணர்ந்த புத்தகம் இன்னும் கையிலே கிடந்தது. அதை மீண்டும் ஒரு முறை பிரட்டிப்பார்த்தேன். இந்த கதைப்புத்தகங்கள் ஏன் இன்னும் என்னோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்ற சிந்தனைகளில் லகிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த சிந்தனை ஓட்டத்தில் பொலபொலவென வந்துகொட்டிய பழைய நினைவுகளை, சட்டென்று எழுந்து, கையில் கிடைத்த வெற்று காகிதத்தில் கூடார விளக்கு செத்துப்போகும் வரை கிறுக்கித்தள்ளிக்கொண்டே இருந்தேன். அந்த கிறுக்கல்களின், முறைப்படுத்தப்பட்ட விரிவாக்கம் தான் இந்த முழு கட்டுரை. ◆ அது 1970களின் இறுதிக்காலம் என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டில் கதைப்புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஆரம்பித்துக்கொண்டிருந்த காலம்தான் அது. இருப்பினும், ஒருவரை ஒருவர் முட்டிமோதி, திட்டித்தீர்த்து புத்தகங்களை பறிக்கும் பழக்கம் எதுவுமில்லாத காலம் அது. மேசையில் பலகாலம் அந்த புத்தகம் தூங்கிக்கிடந்தது. எழுப்பிவிடுவார் யாருமின்றி. யார் வீட்டினுள் அதை கொணர்ந்தார் என்று தெரியவில்லை. கொணர்ந்தவரே அதை பெரிதாக கண்டுகொண்டது போலவும் தெரியவில்லை. அந்த புத்தகத்தை கடந்து போய் வரும் நேரமெல்லாம், அது கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. பல நாட்கள் கடந்த பின்பும் கூட அது அந்த மேசையை விட்டு அகலாத நிலையில், அந்த புத்தகம் கெஞ்சியபடி ஒரு நாள் கேட்டது என்னை, "தயவு செய்து என்னை ஒருமுறை வாசிக்கவும்". ஒருநாள், யாருக்கு அந்தப்புத்தகம் உரித்தானதென்று தெரியாததால், எல்லோருமே கூட்டாக வெளியே போயிருந்த தருணம் பார்த்து, 'சரி, என்னதான் சொல்ல வருகிறாய் என்று பார்ப்போம்' என்று, அதை எடுத்து திறந்துப்பார்த்தேன். பெரிய கட்டாக இருந்தாலும், முன் அட்டையில் எதுவும் இல்லை. இடையிடையே தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் பல ஆக்கங்களின் பல பக்கங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைச்சுவை துணுக்குகள். சில விளம்பரங்கள். முழுப்புத்தகமும் ஒரே நாவல் இல்லை. வாராந்த சஞ்சிகை ஒன்றில் வந்த தொடர்கதை ஒன்று, அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சேர்த்து முழுப்புத்தகமாக கட்டப்பட்டிருந்தது. பிரட்டிப்பார்க்கும் போதே கண்ணில் பட்டு போன துணுக்குகளை மாத்திரம் வாசிப்பதில் நேரம் கொஞ்சம் செலவு செய்த பின், அதில் வாசிக்க எதுவும் பெரிதாக இல்லை என்று தூக்கிப்போட்டுவிட்டேன். இன்னும் சில நாட்கள் கடந்த பின்னும் அந்த புத்தகம் அந்த மேசையிலேயே கிடந்தது. இந்த முறை அதை கொஞ்சம் கவனத்தோடு பிரித்துப்பார்த்தேன். அந்த கட்டுக்குள் ஒளிந்திருந்த நாவல், 'விளக்கு மட்டுமா சிவப்பு?'. கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் உருவான நாவல். கண்ணதாசன், பெரிய கவிஞர் என்று எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அவருக்காக விரும்பி வாசிக்காமல், மேலோட்டமாக அந்நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். கதை என்னை பெரிதாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. கதையின் பாத்திரங்கள் பெரிதாக பதியவில்லை. கதாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பதுவும் புரியவில்லை. கதாப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் கோர்த்துப்பார்க்க இயலவில்லை. வாசிப்பின் வாசனை தெரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் தன்மையில் எழுதப்பட்ட பல பக்கங்களும் இருந்தன. தொடங்கியதை முடிக்க வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக பல பக்கங்களை இழுத்துச்சென்றேன். இது கதையின் தவறல்ல. வாசித்த எனக்கு, அன்று நாவல்களின் அமைப்பு இப்படித்தான் இருக்கும் என்றே தெளிவு இல்லாமையினால், நாவலை நாவலாக உள்வாங்கிக்கொள்ள எந்த அனுபவமும் அந்த வயதில் இருக்கவில்லை. நான் வாசித்த முதல் நாவல் இது. அம்புலிமாமா, கொமிக்ஸ் புத்தகங்களிலிருந்து எனக்கு பதவி உயர்வு தந்த புத்தகம் இது. வாசிப்பதில் கொஞ்சம் நாட்டம் இருந்தாலும், அன்றைய எனது இளம் வயதுக்கு அது பக்கங்களிலும் பெரிதாக இருந்தது, இலக்கிய தன்மையிலும் பெரிதாக இருந்தது. அத்தோடு, அதன் உள்ளடக்கமும் என் வயதுக்கு மிகமிஞ்சியதாக இருந்தது. ஆனால் அந்த எழுத்தில் ஏதோ மந்திரம் இருப்பதை உணர்ந்தேன். மேலும் சில நாள் கழித்து, இரண்டாவது முறை அந்த எழுத்துக்களுக்காக என்னை அந்த புத்தகத்துக்குள் மீண்டும் நுழைத்தபோதுதான், நான், நாவல்களின் தன்மைகள் இதுதான், இப்படித்தான் கதையோட்டம் இருக்கும், என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். இந்த புத்தகம் எனக்கு நாவல்களை வாசிக்கும் ஆசைகளை தூண்டிவிட்டது மாத்திரமல்ல, உலகைப்பற்றிய ஒரு தெளிவான சிந்தனையையும், தேடலுக்கான அத்திவாரத்தையும், வெளியுலகை புத்தகங்கள் மூலமும் அறிந்து கொள்ளலாம் என்கின்ற நிலைப்பாட்டையும் உருவாக்கித்தந்தது. சிவப்பு விளக்கு பகுதிகளில், தங்கள் வயிற்றுக்காவோ அல்லது தங்களை மீறிய வற்புறுத்தல்களுக்காகவோ உள்ளே வந்து சேர்ந்த பெண்களின் கதை அது. கதாசிரியர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதுபோல் அது பலரின் உண்மைப்பதிவு. வாசிக்க வேறெந்த புத்தகமும் இன்றி, ஒரு நாள் இதை மூன்றாம் முறையாகவும் வாசிக்கலாம் என்று தேடிப்பார்த்தால், அந்த புத்தகம் அந்த மேசையில் இல்லை. அது தனது சொந்த இடம் போய் சேர்ந்துவிட்டிருந்தது. நான் வாசித்து முடிக்கும் வரையும் அந்த புத்தகம் அந்த மேசையில் இருந்தது ஒரு புதுமை தான். நான் அப்போ வாழ்ந்து கொண்டிருந்த பகுதி, சிங்கள மொழியாலும் கலாச்சாரங்களாலும் சூழப்பட்ட ஓர் நகரம். கொஞ்சம் கொஞ்சமாக விரும்பியோ விரும்பாமலோ எங்களை நாங்களே சிங்களமயபடுத்திக்கொண்டிருந்த காலம். இந்த புத்தகத்தின் வரவு அதற்கோர் முற்றுப்புள்ளி வைத்தது. தமிழ் வாசிப்புக்களின் மீது திசை மாற்றிய புத்தகம். வாசிப்பதில் விருப்பங்கள் குவியத்தொடங்கிய காலங்களாக அது இருந்தாலும், அதை உந்தித்தள்ள பெரியதாய் வெளி உதவிகள் இருக்கவில்லை. புத்தகங்களை தூண்டில் போட்டு தேடிப்பிடித்து வந்து வாசிக்க கூடிய முயற்சிகளில் ஈடுபடமுடியாத நேரங்கள் அப்போ. நாங்கள் வாழ்ந்த சிங்களப்பகுதியில், எப்படியோ யாரின் மூலமாவது தானாக வீடு வந்து சேர்ந்தாலேயொழிய, தமிழ் புத்தகங்கள் தேடினாலும் கிடைக்காது. யாரிடமாவது கடன் கேட்டு வாங்கிய காமிக்ஸ், அம்புலிமாமா, குட்டிக்கதை புத்தகங்கள் என்று காலம் கடந்து போய்க்கொண்டிருந்த நேரமது. உலக அக்கிரமங்களை சொல்லும் அளவுக்கோ, அல்லது மனித மனங்களை திரை போட்டு காட்டும் எழுத்துக்களோ, அருகில் வந்து சேர முடியாத தருணங்கள். அதுவும், 1976க்கு முன், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம். எல்லா இறக்குமதிகளையும் தடுத்திருந்த காலம். இந்த இறக்குமதி தடைக்குள் அகப்பட்டுக்கொண்டவைகளுள், தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதியாகிய தமிழ் பத்திரிகைகளும், தமிழ் சினிமாவும் அடங்கும். ஐந்து வருடங்களுக்கு மேல் நடைமுறையில் இருந்த இந்த தடை, உள்நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கும், இலங்கை தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக நின்றது. அப்போ, சிரித்திரன், சுந்தரி என்ற மாதாந்த சஞ்சிகைகளும், வீரகேசரி, மித்திரன் பத்திரிகைகளின் மாதாந்த நாவல்கள் வெளியீடுகளும் மிகவும் சூடு பிடித்தன. இலங்கை தமிழ் திரைப்படங்கள் கூட ஐம்பது நாட்களுக்கு மேல் திரையில் ஓடும் அளவுக்கு பெரிதாக வளர்ந்து விட்டிருந்தன. 1977ம் ஆண்டு ஜெ ஆர் ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் பதவிக்கு வந்து, இந்த தடையெல்லாவற்றையும் நீக்கி விட்டதனால், மீண்டும் தமிழ் நாட்டிலிருந்து புத்தகங்களும் சினிமாக்களும் வரத்தொடங்கின. இலங்கை தமிழர்களின் படைப்புக்கள் மீண்டும் பாதாளம் போய் தொலைந்துவிட்டன. இருந்தும், இலங்கை தமிழ் இலக்கியத்துறையில் அடங்கா ஆசை வைத்திருந்த பல இலக்கியவாதிகளும், பதிப்பகத்தார்களும் எல்லாவிதமான போட்டிகளையும் தாங்கி பல காலம் இயங்கிக்கொண்டிருந்தார்கள். பின், பல காரணங்களால் இலங்கை தமிழ் சினிமா துறையும் தூர்ந்து போய்விட்டது. வார, மாத சஞ்சிகைகளும் ஒவ்வொன்றாக தவறிப்போக ஆரம்பித்தன. ◆ பதினைந்து வயதுக்குப்பின் கொழும்பின் மேற்குபகுதியில் வாசம். புதிய பாடசாலையும், புதிய விதமான சக மாணவர்களும், வாசிப்பின் மீதிருக்கும் காதலை வளர்த்துவிட்டார்கள். அவர்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள புத்தகங்கள் குவிந்து போய் இருக்காவிட்டாலும், வாசிப்பதில் பல பரிணாமங்கள் உண்டு என்பதை அவர்கள் பேச்சில் உணர்த்தினார்கள். இது நிறையவே எனக்கு புத்தகங்களை சந்திக்கும் வாய்ப்புக்களை உருவாக்கித்தந்தது. முதலில், பதினைந்து வயதாகினபின்பும், இன்னும் அம்புலிமாமாவை வாசித்து மகிழும் ஒருவன் 9ம் வகுப்பில் நண்பனாக வந்து சேர்ந்து விட்டான். தான் சேமித்து வைத்த பல அம்புலிமாமா புத்தகங்களை தந்து, நானும் வாசிப்பதை பார்த்து ரசித்தவன். அவனுக்காகவே நானும் அந்த வயதில் அம்புலிமாமா வாசித்திருக்கிறேன். பகிர்ந்து கொள்ள பல புத்தகங்களை தம் வசம் வைத்துக்கொண்டவர்கள் சிலர் சக வகுப்பில் இருந்தாலும், அவற்றை பகிரக்கூடிய பரந்த மனநிலையில் அவர்கள் இல்லாமல் இருந்தது உண்மை. அவ்வகையில், பல காமிக்ஸ் புத்தகங்களை அதிகளவில் சேர்த்து வைத்து தான் மாத்திரம் வாசித்து எங்களுக்கெல்லாம் வர்ணம் காட்டியவன் எனக்கு என் பக்கத்துக்கு பெஞ்ச் நண்பன். "ஒரு முறை தாடா. வாசித்துவிட்டு தருகிறேன்" என்றால் "ஓகே' என்பான். ஆனால், தரமாட்டான். ஆயினும், அவன் அறிமுகப்படுத்திய அல்லது அறிவேற்றிய அந்த காமிக்ஸ் உலகம் பெரிது. ஒரு காலம் அவனுக்கு காமிக்ஸ் மீது காதல் தொலைந்துபோய்விட்டிருந்த வயதில், அவன் தன்னிடம் இருந்த நாற்பதுக்கும் மேட்பட்ட காமிக்ஸ் புத்தகங்களை எனக்கு தந்தான். காமிக்ஸ் வாசிக்கும் ஆசை அப்போதெல்லாம் எனக்கும் அருகிப்போய்க்கொண்டிருக்கும் காலமாயினும், மீண்டும் அவற்றை உள்வாங்கிக்கொண்டு, பாவித்த புத்தகங்களை விற்கும் புத்தக காரனுக்கு, கிடைத்த விலைக்கு விற்று விட்டேன். வந்த பணத்தில் மீண்டும் புத்தகங்களுக்கே செலவு செய்தது உண்மை. வாசிப்பதில் விருப்பம் கொண்ட பலரை சுற்று வட்டாரத்தில் சந்திக்கும் வாய்ப்புக்கள் நிரம்ப ஆரம்பிக்க, அதில் என் ஒன்று விட்ட சகோதரனும் (சித்தப்பாவின் மூத்த மகன்) சேர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வாசிக்கும் விருப்பத்தில் இருந்தாலும், புத்தகங்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு ஆசைகள் இருந்தாலும், அதை நிறைவேற்ற, நிறைய புத்தகங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கவில்லை. ஆனால் வாசிப்பதில் விருப்பம் கொண்ட இவரும் அருகில் இருந்தது என்னை வாசிப்பதற்கு உந்தித்தள்ளியது என்னவோ உண்மை. எனக்கு தமிழ் நாட்டு வார சஞ்சிகைகளை அறிமுகம் செய்தது எனது மூத்த அக்காவின் கணவர். அவர் வாராந்தம் வாங்கித்தந்த ஆனந்த விகடனும் குமுதமும் எனக்கு புது உலகத்தை காட்டியது. ஓரிரு மணிநேரங்களில் அவர் புத்தகங்களை முழுமையாக வாசித்து முடித்து விட்டு எங்கள் வீட்டிலேயே விட்டு விட்டு போய் விடுவார். காக்கை போல காத்திருந்த நான் அதை ஓடிச்சென்று கவ்விக்கொண்டு வந்து பலதடவைகள் உள்வாங்கிக்கொள்வேன். வீட்டிலிருக்கும் எல்லோரும் மாறி மாறி வாசிப்பதால், அந்த சஞ்சிகைகள் வீடு முழுதும் உலா வந்த படியே இருக்கும். அடுத்த வாரம் புது சஞ்சிகைகள் வரும்வரை, கதிரையிலோ கட்டிலிலோ அல்லது மேசையிலோ எப்பவும் இந்தப்புத்தகங்கள் இருக்கும். புதியவைகள் வந்த பின், நானே பழையதை அலுமாரியில் எனெக்கென்று ஒதுக்கிவைக்கப்பட்ட அடுக்கில் சேர்த்து வைத்துக்கொள்வேன். எனது அடுக்கில் என் உடுப்புக்களை விட இந்த சஞ்சிகைகள் தான் இடத்தை நிரப்பி இருந்தன. ஒரு காலத்தின் பின் அத்தான் வெகு தூரம் தொழில் நிமிர்த்தம் போன பின், இந்த சஞ்சிகைகளும் இல்லாது போயின. அதற்கு பின் நான் எனக்கு கிடைத்த 'பாக்கெட் மணி'யில் வாங்க ஆரம்பித்தேன். பணம் இல்லாத போது வழக்கம் போல் அம்மாவிடம் கேட்டு பெற்றுக்கொள்வேன் அல்லது மூத்த அண்ணனிடம் கெஞ்சி பெற்றுக்கொள்வேன். அன்று ஏற்கனவே வாங்கிய சஞ்சிகைகளுடன், கல்கி, இதயம் பேசுகிறது, கற்கண்டு, குங்குமம், ராணி முத்து என்று பட்டியலே நீண்டு போய்விட்டன. எல்லா சஞ்சிகைகளும் எப்படியோ வீடு வந்து சேர்ந்துவிடும். பின் ஒரு நிலையில் எனது மூத்த அண்ணனும் முழுமையாக இதில் சேர்ந்து கொண்டார். அவர் வாங்கிக்குவித்த சினிமா சஞ்சிகைகள் ஆயிரம். தமிழ் திரைப்படங்கள் பார்க்க பல வாய்ப்புகள் வந்தமையாவிட்டாலும், தமிழ் சினிமாவை பற்றி ஒரு முழு அறிவையும் பெற்றுக்கொண்டது அண்ணன் வாங்கித்தந்த இந்த சினிமா புத்தகங்களாலேயே. பேசும் படம், பிலிமாலயா, சினிமா எக்ஸ்பிரஸ் இன்னும் பல. எனக்கு நூலகங்களை அறிமுகப்படுத்தியது, என் பக்கத்துக்கு வீட்டு அண்ணன் ஒருவர். அவரிடம் நூலகத்துக்கான உறுப்பினர் அட்டை இருந்தது. இரண்டு வாரங்களுக்கு இரண்டு புத்தகங்கள் தான் எடுத்துச்செல்லமுடியும். ஆனால் நாங்கள் ஒரு வாரத்திலேயே அதை வாசித்து முடித்துவிட்டு மீண்டும் அடுத்தவாரம் புது புத்தகங்களை எடுத்துக்கொள்வோம். இந்த நூலகம் எனக்கு பல தமிழ் நாட்டு நூல்களை அறிமுகப்படுத்தின. இப்படி என் வாசிப்புகளுக்கு பலம் சேர்க்க பலர் அருகே வந்து போனார்கள். அன்று என்னை வாசிக்க பழக்கிய எல்லோரையும் ஒரு முறை நன்றியுடன் நோக்குகிறேன். என் வாழ்க்கையில் வந்து போன பல வெற்றிடங்களை நிரப்பியவை புத்தகங்களே. இவை யாவும் எனதருகே இல்லாது இருந்திருப்பின், இன்று எனது அழகிய தருணங்களை shorts, reels என அழுகிப்போயிருக்கோமோ என்னவோ. பல காலங்கள் இப்படி சேமித்த புத்தகங்கள் வீட்டில் இடத்தை நிரப்புகின்றதே என்று, விருப்பமின்றி, முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை, எங்கள் பாடசாலையில் புதிய நூலகம் திறக்கப்பட்ட போது, ஒவ்வொரு புத்தகத்திலும் என் கையொப்பங்களையிட்டு, அதற்கு கொடுத்தேன். ஆசிரியர் வராத 'free' பாடநேரங்களில் மாணவர்கள் நூலகத்துக்கு தான் அனுப்பப்படுவது வழக்கம். அப்போ எல்லோரின் கைகளிலும் தவழ்ந்தது என் கையொப்பமிட்ட அந்த வாராந்த சஞ்சிகைகளே. இதனால் நான் பாடசாலையில் கொஞ்சம் பிரபல்யமடைந்திருந்தேன். பாடசாலை விட்டு சில வருடங்களின் பின் ஒரு முறை எதேற்சையாக ஆசிரியர் ஒருவரை பாதையில் சந்தித்தபோது அவர் சொன்னார். "நீரும் ஸ்கூலில் பெயரை பதித்து விட்டு தான் போயிருக்கிறீர்" என்று. அவர் அதை நல்லதுக்கு சொன்னாரா அல்லது நக்கலுக்கு சொன்னாரா என்பது புரியவில்லை. நல்லதுக்கு தான் சொன்னார் என்று, 'புத்தகங்கள் உங்களை பல தூரம் கொண்டு செல்லும் என்பார்களே, இது தான் அதுவோ' என்று மனம் கொஞ்சம் மகிழ்ந்துகொண்டது. ◆ 1980களின் ஆரம்ப மாதங்களில், எதேச்சையா கையில் வந்து சேர்ந்த புத்தகம், வீரகேசரி வெளியிட்ட, "காட்டாறு". இலங்கை எழுத்தாளர் செங்கை ஆழியான் (க குணராசா) அவர்களின் எழுத்தில் பதிந்த புத்தகம். அன்று வரை இலங்கை எழுத்துக்களை வாசிக்க பெரும் பிரயத்தனங்களை ஏற்படுத்தாத நிலையில், இந்த புத்தகம் எங்கேயோயிருந்து என்னிடம் வந்து சேர்ந்த பொக்கிஷம். இது எனது தேடல் அல்ல. ஆயினும் இன்று வரை ஐந்து தடவைகள் வாசித்தும் ஏனோ என் மனம் விட்டகலாத ஓர் படைப்பு. இருபத்து ஐந்து வருடங்களின் பின் யாழ் பயணமொன்றின் போது கடை தேடிப்போய் ஓர் பிரதியை என் வசமாக்கிக்கொண்டேன். அன்றிலிருந்து இன்றுவரை அப்பப்போ பக்கங்களை பிரட்டிப்பார்த்து பரவசப்பட்டுக்கொள்வது வழக்கமாகிவிட்டது. என்னுள் இப்புத்தகம் செலுத்திய ஆளுமையை மீள அசைபோட்டு பார்ப்பதற்காகவே மேலும் மூன்று முறை வாசித்தாயிற்று. யாழ்ப்பாணதிற்கு இதற்கு முன் இரு முறை போய் வந்த அனுபவம் இருந்தாலும், யாழ் மக்களின் வாழ்க்கை முறையை முழுமையாக கொழும்பிலிருந்தவாறு தெரிந்து கொள்ளமுடியாத ஒரு நிலையை இந்த புத்தகம் தீர்த்துவைத்தது. இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளில் நான் வாசித்த முதல் படைப்பு இது. தமிழ் நாட்டின் வாராந்த வெளியீடுகளில் மூழ்கிப்போய் கிடந்த நாட்களில், வாசிக்க மாறுதலாக இருந்தது. துல்லியமான யாழ் பேச்சுவழக்கு, யாழ் மண்ணை மையப்படுத்திய கதையமைப்பு. புதியதோர் வாசிக்கும் அனுபவத்தை கொடுத்த புத்தகம். இதன் விளைவாக பல இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகளின் தேடல் உந்தப்பட்ட காலம். ◆ வீரகேசரி பிரசுரம், அழகான சமூக நாவல்களை வெளியிட்டுக்கொண்டிருந்த காலங்களில், மித்திரன் வெளியீடு என்ற பெயரில் மாதாந்தம் வயது குறைந்தவர்க்கு உகந்ததல்ல என்று வகைபடுத்தப்பட்ட கதைகளையும் வெளியிட்டு வந்தது. நானும் மித்திரன் வெளியீடான, "சாத்தானின் ஊழியர்கள்" என்ற நாவலை அந்த வயதின் உந்துதலில் காரணமாகவும், வேண்டாம் என்று பெரியவர்கள் எதை சொல்லுகிறார்களோ அதை செய்தேயாகவேண்டும் என்ற மனப்பாங்குகொண்ட வயதாகையினாலும், அதை வாங்கி படித்தேன். அளவுக்கு அதிகமான விரசமாக அந்த புத்தகம் இல்லாதுவிடினும் "முத்தம் கொடுத்தார்கள்", "கட்டி அணைத்துக்கொண்டார்கள்", "அறைக்குள் இருவரும் போய் கதவை சாத்திக்கொண்டார்கள்" போன்ற வாக்கியங்களே அன்றைய காலங்களில் இளையவர்கள் வாசிப்புக்கு உகந்ததல்ல என்று தடுக்கப்பட்டவைகளாக இருந்தன. எனக்கோ ஏற்கனவே "விளக்கு மட்டுமே சிகப்பு" வாசித்த அனுபவம் இருந்ததால் இது ஒன்றும் பெரியதொரு விடயமாக இருக்கவில்லை. வீட்டில் மற்றயவர்களும் இதை வாசித்தால் எதையாவது செல்வார்களோ என்று அந்த புத்தகத்தை, என் வகுப்பில் 'அந்த மாதிரி புத்தகம் விரும்பும்' பின் வரிசை சகா ஒருவனுக்கு இலவசமாக பரிசளித்துவிட்டேன். அவனும் பல் இழித்தபடி வாங்கி உள்ளே வைத்துக்கொண்டானேயொழிய ஒரு நன்றியும் சொல்லவில்லை. மறுநாள் அவன் பாடசாலை வரவில்லை. ஏன் என்று விசாரித்ததில், அவன் அப்பாவிடம் அந்த புத்தகம் அகப்பட்டு, செவிடு கிழிய வாங்கி கட்டியதாக கேள்விப்பட்டோம். அன்று அவன் எனக்கு நன்றி சொல்லாதது, இன்று என் மனசுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், ஏன் இந்த பெற்றோர்களெல்லாம் இதுக்கெல்லாம் போய் பதற்றமடைகிறார்கள் என்றும் நினைத்துக்கொண்டேன். இது தான் நான் வாசித்த முதல், எனது வயதுக்கு ஒவ்வாத கதை புத்தகமாக இருக்கும். அதை ஒருமுறை தான் வாசித்தேன். இன்னும்மொரு முறை வாசித்து விட்டு கொடுத்திருக்கலாமோ என்று இன்று அறுபது வயதில் கொஞ்சம் வருத்தம் வந்து போயிற்று. ஒரு முறை இதயம் பேசுகிறது மணியன் எழுதிய "Love Birds" புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. அது பள்ளி காதலர்கள் இருவரின் வாழ்க்கையை சொன்ன காதல் கதை. வாசித்து முடித்ததும் கெஞ்சிக்கேட்கின்றானே என்று வகுப்பு சகா ஒருவனுக்கு கொடுத்தேன். பல காலமாகிய பின்பும் அவன் அதை திருப்பித்தருவதாகவில்லை. ஒரு நாள் அவன் வீட்டையே போய் வாசலில் நின்றேன். அவன் வீட்டில் இல்லை. புன்சிரிப்புடன் என்னை வரவேற்ற அவன் அப்பாவிடம் வந்த விடயத்தை சொன்னேன். புத்தகத்தின் பெயரை கேட்டவுடனேயே அவர் முகத்தில் உதித்த புன்னகை கொஞ்சம் மாறி கடுப்பானது. உள்ளே போய் பல நேரம் கடந்த பின் கொனர்ந்து "கட்டிலின் கீழே இருந்து எடுத்தனான்" என்று சொல்லி தந்தார். அடுத்த நாள், அவன் என்னை தேடி ஓடிவந்து, "ஏன்டா வந்து அப்பாவிடம் கேட்டாய். வாசித்து முடித்துவிட்டதும் தந்திருப்பேனே, அவர் என்னை போட்டு எடுத்துவிட்டார்" என்றான். பின் தான் தெரிந்தது அவன் புத்தகத்தை ஒளித்து ஒளித்து வாசித்தான் என்று. இவன் தந்தையும் பரந்த மனப்பான்மையில் இதை யோசிக்கவில்லை என்று கொஞ்சம் ஆதங்கம் ஏற்பட்டது. பின்னொரு நாள் அவனை பார்க்க அவன் வீடு போனபோது அவர் தந்தையின் பார்வை என்மீது நட்பாக இருக்கவில்லை. 'இவன் அப்படிப்பட்ட புத்தகம் வாசிப்பவன்' என்று என்னை குறைத்து மதித்துக்கொண்டாரோ என்னவோ. அதற்குப்பின், 'ஐயா, ஏன் நீர் இன்னும் கிணத்து தவளையாக இருக்கிறீர்' என்று பதிலுக்கு நானும் அவரை குறைத்து மதிப்பிட்டுக்கொண்டேன். அன்றைய கால கட்டத்தில் காதல் கதைகள் எல்லாமே மஞ்சள் பத்திரிகைகள் தான். புத்தகங்கள் வாயிலாக இவற்றை அறிவேற்றிக்கொள்ள என் வயதொத்தவர்க்கு எந்தவித வாய்ப்பும் தரப்படாமையினால் தானோ, எம்மில் பலர் அன்று, காதல் கீதல் என்று தம்மை தொலைத்துவிட்டார்களோ என்னவோ. ◆ இப்போ கொஞ்சம் குற்ற உணர்வு. ஆங்கிலபுத்தகங்கள் கொஞ்சமும் அதிகமாகவே வாசித்திருக்கலாம் என்று. ஆங்கிலத்தில் வாசிப்பவர் அன்று யாரேனும் அருகில் இருந்திருந்தால் நானும் அதனுள் உள்வாங்கப்பட்டிருப்பேனோ என்னவோ. வாரம் இரண்டு ஆங்கில வாராந்த பத்திரிகைகள் வாங்கி அதை ஒரே நாளில் முழுமையாக வாசித்து முடிக்கும் பழக்கம் அப்பாவுக்கு இருந்தது. அதையாவது நான் செய்திருக்கலாமே என்று நினைப்பு இன்று வருகிறது. அப்படி இருந்திருப்பினும், ஆங்கில வாசிப்புக்கள் என்னை தமிழ் வாசிப்புகளிலிருந்து வெகு தூரம் கடத்திச்சென்றிருக்க வாய்ப்புக்கள் நிறையவே இருந்திருக்கும். பாடசாலை விட்டு வந்தகாலங்களில், ஆங்கிலம் தேவை என்ற கட்டாயத்தின் பேரில், ஆங்கிலம் வாசிக்க ஆரம்பித்ததேன். நான் ஆங்கிலத்தை மிக அவசியம் என்று நினைத்து அதை முழுமையாக வாசிக்க ஆரம்பித்த பொழுது, வாசிக்கும் நேரங்கள் குறுகிப்போயிருந்தன. இன்று கணக்கெடுத்ததில், தமிழும் ஆங்கிலமும் சேர்த்து, 300-350 புத்தகங்கள் அளவில் தான் வாசித்தது போல் இருக்கின்றது. இதில் வாராந்த சஞ்சிகைகள் சேர்க்கப்படவில்லை. சஞ்சிகைகள், மூன்று வருட வாசிப்புகளில், ஐநூறுக்கும் மேட்பட்டவைகளாக இருக்கும். இன்னும் நிறையவே வாசித்து இருக்கலாம் என்ற குற்றவுணர்வு இப்போ வந்து போகிறது. இன்று, இங்கு, லண்டனில் என் வீட்டில் அளவுக்கு மீறி புத்தகங்கள் பெட்டிகளில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. வாசிப்பதற்கு இத்தனை புத்தகங்கள் இருந்தும் ஏனோ இன்று நேரங்கள் சுருங்கிவிட்டது. ஆயிரம் அக்கப்போறுகள். அப்பப்போ அந்த பெட்டிகளைத்திறந்து ஏதாவது ஒன்றை வாசிப்போம் என்றால் ஒவ்வொரு புத்தகமும் ஏதாவது கேட்கின்றன. 'இம்முறை என்னை வாசித்தால் தான் என்ன?' என்று, பல காலங்கள் முன்னே வாங்கப்பட்டாலும், வாசிக்கப்படாமல் கிடக்கும் ஒரு புதுப்புத்தகம் கெஞ்சுகின்றது. 'என்னை இனியாவது வாசித்து முடித்துவிடலாமே!' என்று, நான் அறையும் குறையுமாக வாசித்துவிட்டு வைத்த புத்தகமொன்று, கோபப்படுகிறது. 'நீ என்னை வாசித்தாலும் என்னை புரிந்துகொள்ளமாட்டாய்' என்று, நான் எனக்கே என் அந்தஸ்தை மேன்மைப்படுத்திக்காட்ட வாங்கிய சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வசனங்கள் (Salman Rushdie - The Satanic Verses) என்ற ஆங்கில புத்தகம், என்னைப்பார்த்து ஏளனமாக சிரிக்கின்றது. நான் 45 வருடங்களுக்கு முன் வாசித்த முதல் நாவல், 'விளக்கு மட்டுமா சிவப்பு?', சிரித்தப்படி மீண்டும் கேட்கிறது, 'தயவு செய்து என்னை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்'. வாசிக்க முன்பு நேரம் நிறைந்தே இருந்தது. ஆனால் புத்தகங்கள் இல்லை. வாங்க பணமும் இல்லை. இப்போ, பணம் இருக்கிறது, புத்தகங்களும் நிறைந்தே இருக்கின்றன. ஆனால் நேரங்கள் சுருங்கிப்போய்விட்டன. ◆◆ Related Articles : இந்த கட்டுரைக்கான கருத்துக்களை முகநூலில் பதிக்க : On Facebook இந்த கட்டுரைக்கான கருத்துக்களை மின்னஞ்சலில் பதிக்க : udhaydharshans@gmail.com |
Travel Memoir 8 Aug 2021 Hiking in Cader Idris, Wales Oct 2019 Jaffna Isles Seven Days On Two Wheels Jul 2016 Six Days in Maldives Islands Jul 2016 Ten Days in UAEmirates Jul 2016 Eight Days in Hongkong Jan 2015 Pettah Market Colombo, Sri Lanka Dec 2014 Sex Tourism in Thailand What I Witnessed Dec 2014 Bangkok to Singapore Backpacking |